என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடபழனி ஓட்டலில் கொள்ளை போன சம்பவம்: போலீசார் மீட்டு கொடுத்த வைரக்கல் போலியானது- வைர வியாபாரி புகார்
    X

    பிரச்சனைக்குள்ளான வைரக்கல்லை படத்தில் காணலாம்.

    வடபழனி ஓட்டலில் கொள்ளை போன சம்பவம்: போலீசார் மீட்டு கொடுத்த வைரக்கல் போலியானது- வைர வியாபாரி புகார்

    • புகார் மனுவை பெற்ற கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்தது மதுரையை சேர்ந்த அவரது நண்பர் ஆவார்.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை தன்னிடம் வைத்திருந்தார். அந்த வைரக்கல்லை ரூ.23 கோடிக்கு விற்பதற்கு விலை பேசி வந்தார். அந்த வைரக்கல்லை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து விற்பதற்கு சந்திரசேகர் 4 ஏஜெண்டுகளிடம் பேரம் பேசினார்.

    அப்போது வைரக்கல்லை வாங்குவதற்கு வந்திருந்த 4 ஏஜெண்டுகளும் திடீர் கொள்ளைக்காரர்களாக மாறினார்கள். வைர வியாபாரி சந்திரசேகரை நட்சத்திர ஓட்டலில் உள்ள ஒரு அறையில் கை-கால்களை கட்டிப்போட்டு விட்டு வைரக்கல்லை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    வைரக்கல்லை கொள்ளையடித்து சென்ற அருண் பாண்டியராஜன், ஜான் லாயிட், விஜய், ரத்தீஷ் ஆகிய 4 பேர் தூத்துக்குடியில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வைரக்கல் மீட்கப்பட்டது. கைதான 4 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைர வியாபாரி சந்திரசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் மீட்டு தந்த வைரக்கல் உண்மையான வைரம் இல்லை என்றும், அது போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி வடபழனி போலீசாரிடம் கேட்டபோது, அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், உண்மையான வைரக்கல்லை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகார் மனுவை பெற்ற கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வைரக்கல்லை மீட்ட வடபழனி போலீசார் கூறும்போது, கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வைரக்கல்லை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டோம் என்றும், சந்திரசேகர் கொடுத்துள்ள புகாரில் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

    சந்திரசேகர் எழுப்பி உள்ள இந்த புகார் சென்னை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்தது மதுரையை சேர்ந்த அவரது நண்பர் ஆவார். அவருடைய நண்பரிடமும் இதுபற்றி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×