என் மலர்tooltip icon

    சென்னை

    • அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
    • தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.

    அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவிருகிறேன். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

    இந்த பயணத்திற்காக 'உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக அந்த இலட்சினையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது.
    • முதலமைச்சரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் சில மருத்துவ பரிசோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பணிகளை தொடர்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது. முதலமைச்சரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.

    மு.க.முத்து இறப்பின் போது நாள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டதால் சோர்வடைந்தார் என்று கூறினார். 

    • டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
    • லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.

    மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கார் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

    அவரது அலுவலக வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வி.ஐ.பி. பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை அவருக்கு கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்துவிட்டு பணிகளை கவனிக்க வீட்டில் இருந்து நடந்து வந்ததாகவும் வீடியோ வைரல் ஆனது.

    இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்டு செய்யப்படுவேன் என்று தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.

    மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்ததையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நெஞ்சு வலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுந்தரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை;
    • குறைந்தபட்சம் இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது கையூட்டு வாங்காமலாவது நடவடிக்கை எடுத்திருந்திருக்கலாம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த வழக்கறிஞர் ஒருவரிடம் நகராட்சி ஊழியர் ரகுபதி என்பவர் கையூட்டு கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். திமுக ஆட்சியில் எங்கும் கையூட்டு, எதிலும் கையூட்டு என்ற சூழல் நிலவும் நிலையில் அரசின் சேவைக்காக அரசு ஊழியர் கையூட்டு கேட்டிருப்பது எந்த வகையிலும் அதிர்ச்சி அளிக்கவில்லை; மாறாக, தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுக ஆட்சி என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை; அரசு அலுவலகங்களில் இயல்பாக வழங்கப்பட வேண்டிய சேவைகளை, முகாம்களை நடத்தி காலதாமதமாக வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்று தொடக்கத்திலிருந்தே குற்றஞ்சாட்டி வருகிறேன். குறைந்தபட்சம் இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது கையூட்டு வாங்காமலாவது நடவடிக்கை எடுத்திருந்திருக்கலாம்.

    ஆனால், அதைக் கூட செய்யாமல், குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக்கோரி விண்ணப்பித்த ஒருவரின் மனுவில் இருந்த அவரது செல்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து தொடர்பு கொண்டு கையூட்டு வழங்கும்படி அரசு ஊழியர் கட்டாயப்படுத்துகிறார் என்றால் தமிழக அரசால் நடத்தப்படுவது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களா அல்லது 'ஊழலுடன் ஸ்டாலின்' முகாம்களா? என்ற வினா தான் எழுகிறது.

    மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்... பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு விளம்பரப்படுத்தி நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் தங்களுக்கு விளம்பரம் கிடைத்ததாக ஆளும் திமுக வேண்டுமானால் திருப்தி அடையலாமே தவிர, மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக, இத்தகைய விளம்பரத் திட்டங்களுக்கு மாற்றாக சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அரசின் அனைத்து சேவைகளும் கையூட்டு இல்லாமல் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். எனவே, அதை உடனடியாகச் செய்து திமுக அரசு பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

    2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இது தொடர்பாக அவர் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டே உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த கூட்டணி அழைப்பு பற்றி சீமானிடம் இதற்கு முன்பு நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது என்றே கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சீமானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது போல தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பு பற்றி கடந்த 2 நாட்களாக கருத்து தெரிவித்து வரும் சீமான் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இதன் மூலம் சீமான் தனித்து போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடன் சீமான் கூட்டணி அமைத்தால் அது நிச்சயம் அ.தி.மு.க. அணிக்கு பலமாகவே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தேசிய சராசரியை விஞ்சினோம்!
    • அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!

    மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேசிய சராசரியை விஞ்சினோம்!

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!

    அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் அவ்வப்போது குறைவதுமான நிலை இருக்கிறது. இதில் பெரும்பாலான நாட்களில் விலை ஏற்றத்தையே காண முடிகிறது.

    அந்த வகையில் கடந்த மாதம் (ஜூன்) 2-வது வாரம் வரை விலை அதிகரித்து வந்து, பின்னர் குறையத் தொடங்கியது. இப்படியாக விலை குறைந்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏறத் தொடங்கியது. தொடர்ந்து விலையில் மீண்டும் ராக்கெட் வேகம் தெரிந்தது.

    கடந்த வாரத்தில் சற்று வேகம் குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் எகிறி, மீண்டும் உயருவதற்கான அச்சாரத்தை போட்டு இருக்கிறது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 180-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 285-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,380 ரூபாய்க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 75,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 129 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280

    21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440

    20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-07-2025- ஒரு கிராம் ரூ.128

    21-07-2025- ஒரு கிராம் ரூ.126

    20-07-2025- ஒரு கிராம் ரூ.126

    19-07-2025- ஒரு கிராம் ரூ.126

    18-07-2025- ஒரு கிராம் ரூ.125

    • பள்ளிக்கட்டிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    • அனைத்து அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அரசுப் பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த செலவு செய்ய வேண்டுமே தவிர பள்ளிக்கட்டிடங்கள் தரமற்றதாக இருக்க செலவு செய்யக்கூடாது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ந்தேதி அன்று இடிந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் விடுப்பில் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கவில்லை. இந்த பள்ளிக்கட்டிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கெல்லாம் அரசு பள்ளிகளில் கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த அல்லது புதிய கட்டிடங்கள் கட்ட செலவிடப்பட்டதோ அதெல்லாம் முறையாக செலவிடப்பட்டதா என ஆய்வு செய்து, அனைத்து அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அவ்வப்போதே எடுத்து அனைத்து தரப்பு குடும்பத்தினரின் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளை தேடி வரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
    • கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

    அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!

    நன்றி தலைவா

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது.
    • 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 10 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகள் அதாவது 69.14 சதவீதம் அரசு பள்ளிகள் ஆகும். அதேபோல மொத்தமுள்ள 24 கோடியே 80 லட்சம் பள்ளி மாணவர்களில் 12 கோடியே 75 லட்சம் பேர் அதாவது 51.4 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் ஆண்டுக்கு, ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடியாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆகி இருக்கிறது.

    மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

    ஆனால் தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் 53 லட்சத்து 14 ஆயிரத்து 845 மாணவர்களும், 2022-23-ம் ஆண்டுகளில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 26 மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

    • அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!
    • கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு!

    அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.

    இவற்றின் தொடர்ச்சியாக, இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார். 



    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    ×