என் மலர்
சென்னை
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- நூக்காம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெய் நகர், வள்ளுவர் நகர் சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோவில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், அப்பாராவ் கிருஷ்ணா தெரு, பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி.
சோழிங்கநல்லூர் பிரிவு: சீத்தலபாக்கம், வரதராஜப் பெருமாள் கோவில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் மெயின் ரோடு, பிஎஸ்சிபிஎல், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோவில் தெரு, எம்ஜிஆர் நகர், பாசில் அவென்யூ, நூக்காம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெய் நகர், வள்ளுவர் நகர் சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம் கிராமம், நூக்கம்பாளையம் ரோடு, மல்லீஸ் அபார்ட்மெண்ட், கேஜி பிளாட்ஸ், ஆர்சி அபார்ட்மெண்ட், நேசமணி நகர், கைலாஷ் நகர், வரதபுரம், செட்டிநாடு வில்லாஸ், சௌமியா நகர்.
அலமாதி: கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம் கிராமம், கர்பாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், கடாவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், காரணை கிராமம், புதுக்குப்பம் கிராமம், வாணியன் சத்திரம், அயிலாச்சேரி கிராமம், பூ. ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை சாலை, வேல் டெக் சாலை மற்றும் கொள்ளுமேடு சாலை.
தாம்பரம் : மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திரபோஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர், பெரியபாளையம்மன் கோவில் தெரு.
- ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள்.
- ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களும் ரீல்ஸ்களுக்கான இடங்களாக மாறி இருக்கிறது.
குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
விதிகளின்படி ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுப்பது அனுமதிக்கப்படுவதில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால், சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.
எனவே, ரெயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள். அவ்வாறு ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும். இதை தீவிரமாக கடைபிடிக்க ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்க தண்டவாளப் பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஆடி அமாவசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு.
- பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திட அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஆடி அமாவாசையை ஒட்டி பல்வேறு ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு 425 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகின்ற 24. 07.2025 (வியாழக்கிழமை) அன்று ஆடி அமாவசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழும்புரம்) விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் அடர்வு குறைவும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
எனவே பொதுமக்கள் 24.7.2025 அன்று இந்த சிறப்பு பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- கடந்த 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை தொடர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு.
- தற்போது 26ஆம் தேதி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி 8.8.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த சுற்றுப் பயணத் திட்டத்தில், 26.7.2025 அன்று மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 29.7.2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்
சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மாணவி வழக்கு.
- மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் கோரி மாணவி வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அவகாசம் வழங்கப்பட்டதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
- மனுக்கள் பெறப்பட்டு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது.
- தன்னார்வலர்கள் கூடுதலாக பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. நெற்குன்றம் பகுதியில் இன்று நடைபெறும் முகாம் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 15 துறைகள் இணைந்து மக்களுக்கான சேவை கிடைப்பதில் முகாம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 43 சேவைகளை மக்கள் பெற முடியும்.
மனுக்கள் பெறப்பட்டு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் கூடுதலாக வருகிறது. இதற்கு தன்னார்வலர்கள் கூடுதலாக பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர் என செயல்படுத்தி இருந்தனர். ஆனால் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரை ஒருமையில் விமர்சிப்பது சரியான நாகரீகம் அல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் நன்றாக இருக்கிறது. மு.க.முத்து இறப்பின் நேரத்தில் முதல்வர் கூடுதலாக நேரத்தை செலவிட்டு இருந்தார். அதனால் சோர்வு ஏற்பட்டது. பயப்படும் அளவுக்கு ஒன்னும் சிக்கல் இல்லை.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
- அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும், அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்! என்று பதிவிட்டுள்ளார்.
- இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின் போது, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.
- மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.
இருப்பினும், மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்று இருந்த மக்களை காணொலி மூலமாக சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க. இதுவரை ஏற்கவில்லை.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி அமைக்கப்பட்டது முதல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறி வருகிறார். அமித்ஷாவின் வார்த்தைகளையே அக்கட்சி நிர்வாகிகளும் தொடர்ச்சியாக மக்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர்.
ஆனால் கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க. இதுவரை ஏற்கவில்லை.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய எந்த கொம்பனாலும் முடியாது. கூட்டணி பற்றி கவலை இல்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஏமாளி அல்ல என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,
அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.
- இன்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
- முதலமைச்சர் நலமுடன் உள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.
மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி கூறுகையில், முதலமைச்சர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றார்.






