என் மலர்tooltip icon

    சென்னை

    • விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.
    • விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பத்தை கேட்டறிந்து வருகிறார். விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.

    பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். அப்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழிசை, சரத்குமார் போன்றோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
    • வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அவ்வப்போது அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்தனர். கடைசியாக 2023-ம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்தச் சூழ்நிலையில், தற்போது நிலுவையிலுள்ள ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்; ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டி தள்ளுபடி திட்டத்தினை அறிவிக்கவும், ஏற்கெனவே நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு பத்திரங்களை விரைந்து வழங்கவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார்.
    • மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.

    சென்னை :

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.

    இச்சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.



    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்றார்.

    இதனிடையே, தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் ம.தி.மு.க. வெளியேறும் என்ற தகவலுக்கு வைகோ மறுப்பு தெரிவித்தார். 

    • ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
    • இன்று காலையிலும் நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து பலரும் விசாரித்தனர். இதனிடையே, அரசு பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி மாலை வீடு திருப்பினார். இதையடுத்து வீட்டில் ஓய்வில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்திற்கு வந்து பணிகளை தொடர்ந்து வருகிறார்.

    இதனிடையே, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேற்று காலை அடையாறு பகுதியில் நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதுடன் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து இன்று காலையிலும் நடைபயிற்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    இதனை தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக ராமதாசிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.

    அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வரும் நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி தலைவர்கள் எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்து வருகின்றனர். இதற்கெல்லம் பதில் அளிக்காமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி விவகாரத்தில் சத்தமில்லாமல் வேலை பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    • மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.
    • சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.

    சென்னை:

    சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * சென்னையில் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 1164 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    * ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    * மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்

    * சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.

    * நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பர் .

    * உப்பு, சர்க்கரை, எண்ணெயை சற்று குறை என்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் முகாம்களில் நடத்தப்படும் என்றார்.

    • தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
    • இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். யுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவர் யுவராஜ் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆயிரமாயிரம் மர்மங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. மாணவர் யுவராஜ் அவரது விடுதி அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு, கேபிள் ஒயரைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்றும், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

    துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா கடந்த ஜூன் 11-ஆம் நாள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து அனைத்து அறைகளிலும் உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மாணவர் யுவராஜ் எவ்வாறு விடுதி அறையின் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்? என்று சக மானவர்களும், யுவராஜின் பெற்றோரும் எழுப்பும் வினாக்களுக்கும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.

    அதுமட்டுமின்றி, மாணவர் யுவராஜ் மர்மமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் தினத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர் தமது தாய், தந்தையருடன் தொலைபேசியில் மகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் மாணவர் யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தான் பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக இந்த மாதிரிப் பள்ளி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்தத் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியில் அனைத்து சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு, மாணவர்கள் மன மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சூழல் அங்கு இல்லை.

    திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக மாணவர் யுவராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் மாணவர் யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையானது

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,150-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-07-2025- ஒரு கிராம் ரூ.125

    30-07-2025- ஒரு கிராம் ரூ.127

    29-07-2025- ஒரு கிராம் ரூ.126

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    • நடைபயிற்சியின்போது சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மீண்டும் சந்தித்தார்.

    சென்னை அடையாறு அருகே உள்ள தியோசபிக்கல் சொசைட்டியில் நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கே வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், நான் நடைபயிற்சி மேற்கொண்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டோம் என்று கூறி இருந்தார்.

    இது பல்வேறு யூகங்களை கிளப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பு, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடந்தது.

    ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும், முதலமைச்சரின் சகோதரர் மு.க.முத்துவின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் மீண்டும் சந்தித்து பேசினார். இன்று காலையில் அடையாறு தியோசோபிகல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது 3-வது முறையாக அவர்கள் சந்தித்து பேசினார்கள். சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்றபடியே பேசினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் இன்று 3-வது முறையாக சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    • ‘போட்டோ ஷூட்’ நடத்தியபோது, கடல் அலை காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் டாக்டர் தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
    • எனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன.

    சென்னை:

    சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீா்குப்பத்தை சோ்ந்தவா் திருஞானசெல்வம். இவரது மகள் விபூஷ்னியா. இவருக்கும், லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

    டாக்டர் தம்பதியான இவர்கள், தேனிலவுக்காக இந்தோனேசியா சென்றனா். இந்தோனேசியா கடலில் படகில் சென்ற அவர்கள் 'போட்டோ ஷூட்' நடத்தியபோது, கடல் அலை காரணமாக நிலை தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    டாக்டர் தம்பதியை தேனிலவு அழைத்து சென்ற சுற்றுலா நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதலால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறி டாக்டர் விபூஷ்னியாவின் தந்தை திருஞானசெல்வம் வக்கீல்கள் காசிராஜன், அஜித்குமார் ஆகியோர் மூலம் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சுற்றுலா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், 'எனது மகள், மருமகன் உயிரிழந்த கடல் பகுதியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன. சுற்றுலா நிறுவனம் இதை கருத்தில் கொள்ளாமல் அங்கு அழைத்து சென்றுள்ளது. சுற்றுலா நிறுவனத்தின் அஜாக்கிரதை மற்றும் தவறான வழிகாட்டுதலால் தான் இருவரும் உயிரிழக்க நேரிட்டுள்ளது. எனவே, சுற்றுலா நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின்போது சுற்றுலா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சுற்றுலா நிறுவனத்தின் எச்சரிக்கையை பின்பற்ற தவறியதுதான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்துக்கு சுற்றுலா நிறுவனம் பொறுப்பேற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, 'சேவை குறைபாட்டுக்காக ரூ.1½ கோடியும், மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்தை மனுதாரருக்கு சுற்றுலா நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில் சேர்ப்பு.
    • பனையூர் கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை பின்பற்றி, மாநில தேர்தல் ஆணையமும் தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து தற்போது அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. பனையூர் கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • தற்போது கூடுதலாக ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை இந்திய ஹஜ் அசோசியேசன் உறுதி செய்துள்ளது.

    எனவே ஹஜ் பயணம் செல்வோர் வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பத்திற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஆவடி: சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமிபுரம், மாருதி அவென்யூ, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீ ராம் நகர், மூர்த்தி நகர், டிஎன்எச்பி, ஆதிபராசக்தி நகர், தீயணைப்பு நிலைய சாலை, பருத்திப்பட்டு, காமராஜர் நகர், வசந்தம் நகர், ஜேபி எஸ்டேட், ஜீவா நகர், சங்கர் நகர், புட் வனகிரி, என்.எம். ஆனந்தன் நகர்.

    வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், தபதி அம்மான் தெரு, ஜெகந்நாதபுரம், த.ப. செல்வா நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.

    கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் ரோடு, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது, 2வது தெரு, நஜீமா அவென்யூ, திருவள்ளுவர் 3-வது தெரு, திருவள்ளுவர் நகர் 2 முதல் 7வது மெயின் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு அபார்ட்மெண்ட்ஸ் தென்றல் எச்43 முதல் எச்50, மற்றும் முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் வரை.

    பூந்தமல்லி: கோல்டன் ஹோம்ஸ் FDR 1,2, மற்றும் காடுவெட்டி ஆவடி ரோடு.

    ×