என் மலர்
சென்னை
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ரெட்ஹில்ஸ்: ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.
திருமுல்லைவாயல்: பாண்டிஸ்வரம், மாகறல், கொமக்கம்பேடு, காரணை, தாமரைபாக்கம், கொடுவேலி, வேளச்சேரி, கர்லபாக்கம், கடவூர், ஆரம்பாக்கம்.
பல்லாவரம் டிவிசன்: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திருநகர், பத்மநாப நகர், லட்சுமி நகர், எல்ஆர் ராஜமாணிக்கம் சாலை, அண்ணா சாலை 7 முதல் 15-வது தெருவரை, சிக்னல் அலுவலம் ரோடு, காந்தி ரோடு, கலைஞர் ரோடு, செந்தமிர் சாலை, ஸ்ரீனிவாசன் நகர், திருமலை நகர், ஆதம் நகர் 1 முதல் 9-வது தெருவரை, சங்கர் நகர் கிழக்கு மெயின் ரோடு, வெங்கடேஷ்வரா நகர் மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர், கஸ்தூரிபாய் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ECTV நகர், சித்திரை நகர், எம்ஜிஆர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, டிஎஸ் லட்சுமி நாராயண நகர், பஜனை கோவில் தெரு.
பொழிச்சலூர்: திருநகர், பத்மநாப நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலணி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர்.
- பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார்.
- சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர்.
சென்னை:
தமிழக அரசு 'விடியல் பயண' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, சாதாரண கட்டண மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ''மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று போர்டு போட்ட பஸ்சில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு, ஆண்களுக்கான டிக்கெட் தருகிறார்கள். என்ன இது?" என்று பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார். அதில், திருச்சியில் இருந்து முசிறி செல்ல ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் 2 பேருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்தனர். சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது விடியல் பயணத் திட்டத்தின் கீழ் வரும் பஸ் அல்ல. இது திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் பி.எஸ்.-4 புறநகர் பஸ் (நீல நிறம்). இதற்கு பயண கட்டணம் உண்டு. பஸ்சின் கண்டக்டர் மின்னணு பயணச்சீட்டில் பயணி விவரம் மகளிர் என வருவதற்கு பதிலாக, தவறுதலாக ஆண் என குறிப்பிட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார் என்று துணை மேலாளர் வணிகம் கூட்டாண்மை (சேலம் புறநகர் பேருந்து) தெரிவித்துள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
- அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்.
- கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நற்பணிகளையும், சாதனைகளையும் பாராட்டி, எம்.பி. கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, உங்கள் மதிப்பிற்குரிய தந்தை சிவகுமார் அண்ணா மற்றும் தாய் லட்சுமி அண்ணி ஆகியோர் எல்லா வகையிலும் எனது பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியினர்.
அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்த மகிழ்ச்சியான தருணம்.
அகரமிலிருந்து வெளிவரும் மருத்துவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் வெறும் தனிப்பட்ட வெற்றிகள் மட்டுமல்ல, இரக்கம் மற்றும் பொது சேவை உணர்வால் வளர்க்கப்படும் போது கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.
நீங்களும் அகரமில் உள்ள குழுவும் ஒரு அமைதியான புரட்சியை ஏற்படுத்தி, ஒரு குழந்தையை, ஒரு கனவை, ஒரு நேரத்தில் வளர்த்து வருகிறீர்கள்.
உங்கள் அறக்கட்டளையின் பணி முணுமுணுப்புகளில் அளவிடப்படாது, ஆனால் அது தூண்டிய நீடித்த மாற்றங்களில் அளவிடப்படும்.
அகரம் மூலம் அதிகாரம் பெற்ற ஒவ்வொரு குழந்தையும் குணமடையவும், சமூகங்களை வழிநடத்தவும், எண்ணற்ற பிறரை உயர்த்தவும், வரவிருக்கும் தலைமுறைகளில் மாற்றத்தின் அலைகளை உருவாக்கவும் திறனைக் கொண்டுள்ளன.
உங்கள் முயற்சிகள் நீதியான மற்றும் முற்போக்கான இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. கல்வியின் ஒளி, உறுதியான கைகளில் வைக்கப்படுவதால், பிறப்பு மற்றும் சூழ்நிலையின் வேரூன்றிய தடைகளை எவ்வாறு கலைக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன.
வெறும் உயிர்வாழ்வைத் தாண்டி கனவு காண பலத்தையும், கண்ணியம், நோக்கம் மற்றும் சிறப்பைத் தொடர தைரியத்தையும் நீங்கள் பலருக்கு வழங்கியுள்ளீர்கள்.
உங்கள் லட்சியத்திலும் உறுதியிலும் உங்கள் உறவினராக, மக்களின் பிரதிநிதியாக, இந்த குடியரசின் சக குடிமகனாக, இந்த உன்னத முயற்சியில் நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன். நம் அன்பான தமிழ்நாடு மாநிலம் உங்கள் மீது பொழிந்த அன்பை உங்கள் குடும்பம் கனத்த குரலில் திருப்பி அனுப்பியுள்ளது.
நிச்சயமாக, காலத்தின் முழுமையிலும், உங்கள் பெயர் திரைகளிலும் மேடைகளிலும் ஒளிரும் அதே வேளையில், நீங்கள் உயர்த்தியவர்களின் அமைதியான வெற்றிகளில், நீங்கள் ஏற்றி வைத்த ஒளியை முன்னோக்கிச் செல்லும் தலைமுறைகளில் அது இன்னும் நிலையாக பிரகாசித்தது என்று சொல்லப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம்.
- ஈழ சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழ சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது.
ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம்.
வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழ சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழச் சோசலிசக் குடியரசை அடைவதற்கு ரத்தம் சிந்தி, உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து, உயிரை விலையாகக் கொடுத்து, உயிரீந்த மாவீரர்களின் ஒப்பற்ற வீரவரலாறே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும்.
உலகின் எந்த இயக்கத்தினுடைய விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், அறநெறியையும் பின்பற்றி, போரியல் விதிகளையும், மாண்புகளையும் கடைப்பிடித்து, மரபுப்போர் புரிந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
போர் முடியும் கடைசித் தருவாயில்கூட, பழிவாங்கும் நோக்கோடு, சிங்கள மக்களை அழிக்க முற்படாது, அவர்களது குடியிருப்புகள் மீது தாக்குதல் நிகழ்த்த முனையாது, இறுதிவரை அறம்சார்ந்து நின்ற வீரமறவர்கள் விடுதலைப்புலிகள்.
சிங்கள ராணுவமானது, தமிழர்களது குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தமிழ் மக்கள் வாழ்விடங்களின் மீது வான்வழித்தாக்குதல் தொடுத்தது; தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி, தமிழின மக்களைப் பச்சைப்படுகொலை செய்தது.
பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, தமிழர் நிலங்களை அபகரித்து, தமிழர் தேசத்தை சுடுகாடாக்கி, இனவெறியின் கோரத்தாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.
எவ்விதப் போர் நெறிமுறையையும் பின்பற்றாது, இனஅழிப்பு நோக்கில் செய்யப்பட்ட அத்தாக்குதல்களின் மூலம், ஏறக்குறைய 2 லட்சம் மக்களை மொத்தமாய் கொன்றுகுவித்தது சிங்கள இனவாத அரசும், அதன் ராணுவமும்.
ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளைக் கடந்தும், தமிழினத்தின் கோர இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஐ.நா. மன்றமும், சர்வதேச அரங்கும் தமிழர்களுக்கு எவ்விதத் தீர்வையும் பெற்றுத் தர முன்வரவில்லை.
இனப்படுகொலை செய்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீது தலையீடற்ற பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், ஈழச்சொந்தங்களிடம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியுமாக பன்னாட்டு மன்றத்தில் நீதிகேட்டு, தமிழின மக்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை, எம்மினத்தின் இனப்படுகொலையை உலகரங்கில் எடுத்துரைத்து, எமது தரப்பு நியாயங்களை மற்ற தேசிய இனங்களுக்கு மெல்ல மெல்லக் கடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எம்மினத்தின் மாண்பையும், ஈழச்சொந்தங்களின் வலியையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ள 'கிங்டம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது.
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும், மாவீரர் தெய்வங்களான விடுதலைப்புலிகளையும், எம்மினத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தையும், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழ சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் எதுவொன்றையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.
ஆகவே, ஈழ சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 'கிங்டம்' திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் நாளை மறுநாள் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
- முதல் கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை படகு போக்குவரத்து திட்டம்.
சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் மற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் நாளை மறுநாள் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி, நீர்வளத்துறை, போக்குவரத்து தறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்கின்றனர்.
முதல் கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை படகு போக்குவரத்து திட்டமிடப்பட்டுள்ளது.
- விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
- தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் என கூறி விசாரணை ஒத்திவைப்பு.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக சி.வி.சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க கோரி பொதுத்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் மனு மீதான இந்த விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகு, தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் என கூறி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
- முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்தது.
- நாளை மறுநாள் (புதன்கிழமை) இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு தொடங்கி உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு தொடங்கும் திட்டங்களில், முன்னாள் முதலமைச்சர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் முகுல் ரோத்தஹி வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு ஏற்றுக் கொண்டது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
- பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- தமிழக வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பீகார் மாநிலத்தில் நடந்து வந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த ஜூலை 26-ந் தேதி நிறைவு பெற்றது. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்த 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பெயர்கள் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை ஒரு மாத காலம் அவகாசம் தரப்படும். அதன்பின் தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் தான் வருகிற நவம்பர் மாதம் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ?, அங்கு அந்த வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த அடிப்படையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி அவர்கள் தங்கள் பெயரை தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். அதில் சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் பீகார் மாநிலத்தவர் இருக்கிறார்கள். மேலும் கோவை, திருப்பூரில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்க உள்ளது. அப்போது தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் தங்களது பெயர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிப்பார்கள். அவர்கள் மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள்.
இவ்வாறு நடந்தால் தமிழக வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் படி தமிழகத்தில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர்.
தற்போது 14 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கும். இந்நிலையில் நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழகத்தில் தற்போது உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த சுமார் 75 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம்.
அந்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காட்டிற்கு அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டை குறி வைத்திருக்கும் பாஜக ,வாக்காளர் பட்டியலில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது.
தலைமைத் தேர்தல் ஆணையம் வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் கல்லூரி மாணவர் ஜெய சூர்யாவின் தந்தை எம்.முருகன் வழக்கு.
- ஆணவக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை.
தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த கடலூர் கல்லூரி மாணவர் ஜெய சூர்யாவின் தந்தை எம்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விபத்தில் உயிரிழந்த தன் மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், உடன்படித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவியை காதலித்ததால், அவரின் உறவினர்கள் அடிக்கடி மிரட்டியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. ஆணவக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடலூர் கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
- சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
மனுவில், ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிபிஐ விசாரணை கேட்ட இந்த மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து அக்.20-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
- தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை அன்றைய தினம் தொட்டு இருந்தது. அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் விலை சரியவும் தொடங்கியது.
இடையில் சற்று விலை கூடினாலும், மற்ற நாட்களில் குறைந்த வண்ணமே இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200
31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-08-2025- ஒரு கிராம் ரூ.123
02-08-2025- ஒரு கிராம் ரூ.123
01-08-2025- ஒரு கிராம் ரூ.123
31-07-2025- ஒரு கிராம் ரூ.125
30-07-2025- ஒரு கிராம் ரூ.127






