என் மலர்tooltip icon

    சென்னை

    • ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
    • ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

    தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அறப்போராட்டத்தையும், 30 ஆண்டுகாலம் மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் மறப் போராட்டத்தையும் நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.

    இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • அன்புமணி தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே பா.ம.க.வில் கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

    இரு தரப்பினரும் பொதுக்குழுவை கூட்டப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் பா.ம.க.வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    டாக்டர் ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் அன்புமணி தரப்பில் மாமல்லபுரத்தில் வருகிற 9-ந்தேதி பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் டாக்டர் அன்புமணி தரப்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து டாக்டர் ராமதாசும் பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஆதரவு திரட்ட தொடங்கி இருக்கிறார்.

    இதற்காக டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதங்களை அனுப்பி வருகிறார். டாக்டர் ராமதாஸ் கையெழுத்துடன், கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர் ஆகியோரின் பெயரில் இந்த அழைப்பு கடிதம் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்கிறார். இதையடுத்து அவரும் பா.ம.க. நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்ட தொடங்கி உள்ளார்.

    இதனால் பா.ம.க. நிர்வாகிகள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ம.க.வில் உள்ள பிரச்சனைகள் விரைவில் சரியாகும் என்று கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இது தொடர்பாக கும்பகோணத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறியதாவது:-

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடி முடி வெடுக்கும்.

    அதன் முடிவுகளை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிவிப்பார். வழக்கமாக டிசம்பர் மாதம் கடைசி வாரம் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும். தேவைப்படும்போது பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

    தற்போது பா.ம.க.வில் நிலவும் சின்ன சின்ன சலசலப்புகள் அனைவருக்கும் தெரியும். அவை அனைத்தும் மிக விரைவில் நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.
    • அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க., அ.தி.மு.க.வை பேய் பிசாசு என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    * பிசாசு வேண்டாம் என்று பேயை 5 ஆண்டுகள் கட்டி கொள்கின்றனர்.

    * அ.தி.மு.க. வைத்து தி.மு.க.வை எப்படி ஒழிக்க முடியும்?

    * தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.

    * மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும், கூட்டணியால் அல்ல...

    * அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது.

    * அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க., அ.தி.மு.க. பயணிக்கிறது.

    * அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்?

    * விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது.

    * திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள் என்றார். 

    • திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
    • டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி திவ்யா படித்து வந்தார்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.

    திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
    • துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.

    இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தமிழ்நாட்டிற்கு எதிராக துரோகம் செய்யும் கட்சியாக பா.ஜ.க. செயல்படுகிறது.

    * தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.

    * துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க.வுடன் அணி சேர்வது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாகும்.

    * துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.

    * தமிழக மக்களை காட்டி கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார்.
    • விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2538 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தலைமை தாங்கி 2538 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். அரசு முதன்மை செயலாளர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசுகிறார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நகராட்சி நிர்வாக துறையில் 2538 இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டோன்மென்ட் பட்ரோடு அண்ணா சிலை அருகே நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கழக நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

    • தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
    • புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திறனற்ற திமுக அரசு, இருக்கும் வேலைவாய்ப்புகளையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் மாநகரம் சூரமங்கலத்தில் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சில நாள்களுக்கு மின் கதவடைப்பு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் அனைவரும் தானாக பணி விலகும் சூழலை ஏற்படுத்தி நிறுவனத்தை நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    சூரமங்கலத்தில் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தலேமா நிறுவனம் பின்னர் ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்ட காமிக் குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் தலேமா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வந்த நிறுவனத்தை மூடுவதற்காக நஷ்டக் கணக்குக் காட்டப்படுவதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த அநீதியை அனுமதிக்கக் கூடாது.

    தலேமா நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்காகவே அதன் நிர்வாகம் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு பணியாற்றும் 300 பெண்கள் உள்ளிட்ட 600 பணியாளர்களையும் பணியிலிருந்து தானாக விலகிக் கொள்ளும்படி அதன் பொதுமேலாளர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதற்கு தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், தலேமா நிறுவனம் தானாக முன்வந்து கதவடைப்பு செய்திருக்கிறது.

    தலேமா நிறுவனம் கதவடைப்பு செய்யக்கூடாது என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியும் அதையும் மீறி தலேமா நிறுவனம் கதவடைப்பு செய்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, அதன் கடமையை மறந்து தலேமா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத செயல்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரசுத் துறை மூலம் 5.5 லட்சம் பேருக்கும், தனியார் நிறுவனங்கள் மூலம் 50 லட்சம் பேருக்கும் வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்றவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திறனற்ற திமுக அரசு, இருக்கும் வேலைவாய்ப்புகளையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலேமா நிறுவனத்தின் உயரதிகாரிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி, ஆலை எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, அதை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பணியாற்றும் 600 தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து பணி வழங்கப்படுவதையும், அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். 

    • நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை நிலவரம்.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,370-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-08-2025- ஒரு கிராம் ரூ.123

    03-08-2025- ஒரு கிராம் ரூ.123

    02-08-2025- ஒரு கிராம் ரூ.123

    01-08-2025- ஒரு கிராம் ரூ.123

    31-07-2025- ஒரு கிராம் ரூ.125

    • மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவிப்பினை அனுப்பியுள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் ஒரு பல் மருத்துவர் கூட நியமனம் செய்யப்படாததும், பதவி உயர்வு வழங்கப்படாததும்தான்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கடலூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததன் காரணமாக, அந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவிப்பினை அனுப்பியுள்ளது.

    இந்த நிலைமைக்கு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தள்ளப்பட்டதற்குக் காரணம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் ஒரு பல் மருத்துவர் கூட நியமனம் செய்யப்படாததும், பதவி உயர்வு வழங்கப்படாததும்தான்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, அரசு பல் மருத்துவமனைகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் விரைந்து நிரப்பவும், ஆட் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தவும், பல் டாக்டர்களுக்கான பதவி உயர்வை அவ்வப்போது அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும்.
    • தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22671) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும். அதே போல, மதுரையில் இருந்து தாம்பரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) இனி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும். அதே போல, புதுச்சேரியில் இருந்து வந்த பயணிகள் ரெயில் இனி தாம்பரத்திற்கு பதிலாக எழும்பூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ரெட்ஹில்ஸ்: ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.

    திருமுல்லைவாயல்: பாண்டிஸ்வரம், மாகறல், கொமக்கம்பேடு, காரணை, தாமரைபாக்கம், கொடுவேலி, வேளச்சேரி, கர்லபாக்கம், கடவூர், ஆரம்பாக்கம்.

    பல்லாவரம் டிவிசன்: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திருநகர், பத்மநாப நகர், லட்சுமி நகர், எல்ஆர் ராஜமாணிக்கம் சாலை, அண்ணா சாலை 7 முதல் 15-வது தெருவரை, சிக்னல் அலுவலம் ரோடு, காந்தி ரோடு, கலைஞர் ரோடு, செந்தமிர் சாலை, ஸ்ரீனிவாசன் நகர், திருமலை நகர், ஆதம் நகர் 1 முதல் 9-வது தெருவரை, சங்கர் நகர் கிழக்கு மெயின் ரோடு, வெங்கடேஷ்வரா நகர் மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர், கஸ்தூரிபாய் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ECTV நகர், சித்திரை நகர், எம்ஜிஆர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, டிஎஸ் லட்சுமி நாராயண நகர், பஜனை கோவில் தெரு.

    பொழிச்சலூர்: திருநகர், பத்மநாப நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலணி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர்.

    ×