என் மலர்
சென்னை
- சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை.
- மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் இன்று (5.8.2025) பால் உற்பத்தியை அதிகரிக்க 6084 பால் கூட்டுறவு சங்க செயலாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடியதுடன், ஆவின் முகவர்களுக்கு உறைகலன், ஆவின் பாலகங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது.
சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஆணைக்கிணங்க பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் சென்னை மாநகரிலுள்ள 21 ஆவின் ஜங்சன் பாலகங்கள் புனரமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 12 பாலகங்களில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க பல்வேறு விற்பனை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சென்னையில் பால் உப பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 30% அதிகரித்துள்ளது.
மே 2025-ல் ரூ.29 கோடி, ஜூன் 2025-ல் ரூ.30.30 கோடி மற்றும் ஜூலை 2025-ல் ரூ.32.35 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்விற்பனையானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி அனுப்பியதாக தகவல்.
கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியுள்ளார்.
துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக,
சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில் சட்டப்பேரவையில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். மேலும், பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரின் முன் அனுமதியின்றி, கவுரவப் பட்டங்கள் வழங்க இயலாது. பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார்.
துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்.
குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் உள்ளிட்ட ஷரத்துக்கள் மசோதாவில் இருந்தன.
இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
- மழைக்காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மழைக்காலம் தொடங்கும் முன்பே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
- மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்.
சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 2018- 19-ம் காலகட்டத்தில் சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார்.
- சத்யபால் மாலிக் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை:
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னரான சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார் என டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. 2018- 19-ம் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சத்யபால் மாலிக் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். அமைதியின் ஊடாக உயர்ந்து, அதிகாரத்திற்கு உண்மையைப் பேசத் துணிந்த ஒரு மனிதர். அவர் வகித்த பதவிகளை மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் வரலாறு நினைவில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்.
- ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலைசுற்றலை தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அரசு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொண்ட அவர் வீடு திரும்பிய பிறகு கடந்த வாரம் முதல் தலைமைச் செயலகம் சென்று அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கலும் நாட்டினார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-
உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று!
இன்றைய #KolathurVisit-இல்,
* கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்,
* பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து,
* கொளத்தூரில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம்,
* பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம்,
* ரெட்டேரியில் AC பேருந்து நிறுத்தம் என ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்!
நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி! என்று கூறியுள்ளார்.
- புதிதாக தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கீழ் எங்களை பணியாற்ற சொல்கிறார்கள்.
- பிடித்தம் போக மாதம் 12,500 மட்டுமே கிடைக்கும் என்பதால் அதை வைத்து எங்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரண்டு மண்டலங்களிலும் தனியார் மயமாக்கப்பட்டதை கைவிட்டு விட்டு பழைய முறைப்படியே குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் 5, 6 ஆகிய இரண்டு மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரம், வால்டாக்ஸ் ரோடு, பாரிமுனை, கொத்தவால் சாவடி, அண்ணா பிள்ளை தெரு, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, புதுப்பேட்டை வேலாயுதம் தெரு, புதுப்பேட்டை கூவம் சாலை உள்பட அனைத்து இடங்களிலும் சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தெருக்களை துடைப்பம் மூலமாக சுத்தம் செய்வது வழக்கம். இந்த பணிகளும் தடைபட்டுள்ளதால் பெரும்பாலான சாலைகள் சுத்தப்படுத்தப்படாமல் குப்பையாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெறவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
5, 6 மண்டலத்துட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு 4, 7, 8ஆகிய மண்டலத்துட்பட்ட பணியாளர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் இன்று தெரிவித்தனர்.
இதேபோன்று சென்னை மாநகர பகுதிகளில் உள்ள பல்வேறு மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக மற்ற மண்டலங்களிலும் தூய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும் மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று அளித்த பேட்டி வருமாறு:-
ஒவ்வொரு மாதமும் ரூ. 23 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த நாங்கள் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் இது அரசாங்கம் எடுத்துள்ள முடிவு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டனர்.
புதிதாக தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கீழ் எங்களை பணியாற்ற சொல்கிறார்கள்.
ஆனால் தாங்கள் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட மிகவும் குறைவாகவே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிடித்தம் போக மாதம் 12,500 மட்டுமே கிடைக்கும் என்பதால் அதை வைத்து எங்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள்படி எங்களை பணி நிரந்தரம் செய்வதுடன் பழைய முறைப்படியே தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் கூறும்போது, தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் செல்லும் வகையில் துணை முதலமைச்சரையோ அல்லது அமைச்சர்களையோ சந்தித்து முறையிட வேண்டும். தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடுவது சாத்தியமில்லை என்றார். இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சாலைகளை முறையாக சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்தாண்டு 33 கோடியை தொடுகிற வகையில் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
சென்னை:
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
சென்னையில் 30 சதவீதம் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய் எட்டிய நிலையில், இந்தாண்டு, 33 கோடியை தொடுகிற வகையில் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆ.அண்ணாதுரை, அமுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- வகுப்பறைக்கு நேரில் சென்று மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
சென்னை:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இக்காவல் நிலையக் கட்டிடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுபாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொதுமக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்புக் கூடம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் தினசரி 2,500 பஸ்கள் இயக்கப்பட்டு, சாதாரண நாட்களில் 50 ஆயிரம் பயணிகளும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் 2 லட்சம் பயணிகளும் பயன்படுத்துகின்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், 9.74 கோடி ரூபாய் செலவில் 24,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறைகள் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும், வகுப்பறைக்கு நேரில் சென்று மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கூடுதல் பள்ளிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் 3 வகுப்பறைகள், ஆய்வகம், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அறைகள், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் தலா 6 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக அறை, மூன்றாம் தளத்தில் 3 வகுப்பறைகள், கலையரங்கம் ஆகியவற்றுடன் கூடிய இணைப்புக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூரில் 11.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29,514 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட உள்ள புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம், கொளத்தூர், ரெட்டேரியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பஸ் நிறுத்தம், சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6-வது மண்டலம்,
70-வது வார்டு, பில்கிங்டன் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே ஆன்ஸ்லே வாய்க்கால் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் மண்டலம்-6ல், 1 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 69வது வார்டு, ரங்கசாமி தெரு மற்றும் லோகோ ஸ்கீம் 1-வது பிரதான சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் வார்டு-64, 65, 67, 69 ஆகியவற்றில் உள்ள ஒன்பது பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூரில் தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க.
- இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு.
தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டு வரப்பட்டிருக்கு. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் பணி.
ஆனா அது மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க. பொதுமக்களிடம் போய் சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை, தி.மு.க.வினர் நடுவில் எடுத்துக்கறதுனால, சாதாரண மக்களிடம் அதுபோய் சேர்வது இல்லை அதனால நாங்க மக்களை சந்திச்சுப் பேசப் போறோம்.
இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துல அத்தனை பேர் இறந்து போனாங்க. அந்த வழக்கு என்னாச்சு? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்னாச்சு?
எங்க பார்த்தாலும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை. காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது எதற்குமே பதில் இல்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுது. தி.மு.க.வின் அந்த முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்குப் பயனளிக்காமல், தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிற தி.மு.க.வைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் எங்கள் பணிதான்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
- சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும்.
- மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.
மதுரை:
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வேறு விவசாயத்திற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதே ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தான். மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.
சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. சட்டமன்றத்தில் சாதி ஆணவக்கொலைகள் குறித்து விவாதித்த பொழுது தற்போதுள்ள சட்டங்களை போதுமானது. புதிய சட்டங்கள் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்,
ஆனால், தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறக் கூடிய சாதி ஆணவக் கொலைகள் தமிழகத்திற்கு தனி சட்டம் தேவை என்பதை தான் வலிறுத்துகிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வண்ணம் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வற்புறுத்தி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளோம்" என கூறினார்.
- ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
- ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அறப்போராட்டத்தையும், 30 ஆண்டுகாலம் மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் மறப் போராட்டத்தையும் நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






