என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் தேங்கி கிடக்கும் குப்பைகள்: 5-வது நாளாக நீடிக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
    X

    சென்னையில் தேங்கி கிடக்கும் குப்பைகள்: 5-வது நாளாக நீடிக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

    • புதிதாக தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கீழ் எங்களை பணியாற்ற சொல்கிறார்கள்.
    • பிடித்தம் போக மாதம் 12,500 மட்டுமே கிடைக்கும் என்பதால் அதை வைத்து எங்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரண்டு மண்டலங்களிலும் தனியார் மயமாக்கப்பட்டதை கைவிட்டு விட்டு பழைய முறைப்படியே குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதன் காரணமாக சென்னையில் 5, 6 ஆகிய இரண்டு மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரம், வால்டாக்ஸ் ரோடு, பாரிமுனை, கொத்தவால் சாவடி, அண்ணா பிள்ளை தெரு, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, புதுப்பேட்டை வேலாயுதம் தெரு, புதுப்பேட்டை கூவம் சாலை உள்பட அனைத்து இடங்களிலும் சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

    போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தெருக்களை துடைப்பம் மூலமாக சுத்தம் செய்வது வழக்கம். இந்த பணிகளும் தடைபட்டுள்ளதால் பெரும்பாலான சாலைகள் சுத்தப்படுத்தப்படாமல் குப்பையாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெறவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    5, 6 மண்டலத்துட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு 4, 7, 8ஆகிய மண்டலத்துட்பட்ட பணியாளர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் இன்று தெரிவித்தனர்.

    இதேபோன்று சென்னை மாநகர பகுதிகளில் உள்ள பல்வேறு மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக மற்ற மண்டலங்களிலும் தூய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும் மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    ஒவ்வொரு மாதமும் ரூ. 23 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த நாங்கள் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் இது அரசாங்கம் எடுத்துள்ள முடிவு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டனர்.

    புதிதாக தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கீழ் எங்களை பணியாற்ற சொல்கிறார்கள்.

    ஆனால் தாங்கள் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட மிகவும் குறைவாகவே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பிடித்தம் போக மாதம் 12,500 மட்டுமே கிடைக்கும் என்பதால் அதை வைத்து எங்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும்.

    எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள்படி எங்களை பணி நிரந்தரம் செய்வதுடன் பழைய முறைப்படியே தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் கூறும்போது, தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் செல்லும் வகையில் துணை முதலமைச்சரையோ அல்லது அமைச்சர்களையோ சந்தித்து முறையிட வேண்டும். தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடுவது சாத்தியமில்லை என்றார். இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சாலைகளை முறையாக சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×