என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதம்- கூட்டத்துக்கு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதம்- கூட்டத்துக்கு ஏற்பாடுகள் தீவிரம்

    • ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • அன்புமணி தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே பா.ம.க.வில் கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

    இரு தரப்பினரும் பொதுக்குழுவை கூட்டப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் பா.ம.க.வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    டாக்டர் ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் அன்புமணி தரப்பில் மாமல்லபுரத்தில் வருகிற 9-ந்தேதி பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் டாக்டர் அன்புமணி தரப்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து டாக்டர் ராமதாசும் பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஆதரவு திரட்ட தொடங்கி இருக்கிறார்.

    இதற்காக டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதங்களை அனுப்பி வருகிறார். டாக்டர் ராமதாஸ் கையெழுத்துடன், கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர் ஆகியோரின் பெயரில் இந்த அழைப்பு கடிதம் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்கிறார். இதையடுத்து அவரும் பா.ம.க. நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்ட தொடங்கி உள்ளார்.

    இதனால் பா.ம.க. நிர்வாகிகள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ம.க.வில் உள்ள பிரச்சனைகள் விரைவில் சரியாகும் என்று கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இது தொடர்பாக கும்பகோணத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறியதாவது:-

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடி முடி வெடுக்கும்.

    அதன் முடிவுகளை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிவிப்பார். வழக்கமாக டிசம்பர் மாதம் கடைசி வாரம் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும். தேவைப்படும்போது பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

    தற்போது பா.ம.க.வில் நிலவும் சின்ன சின்ன சலசலப்புகள் அனைவருக்கும் தெரியும். அவை அனைத்தும் மிக விரைவில் நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×