என் மலர்tooltip icon

    சென்னை

    • த.வெ.க. தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
    • அனுமதிச்சீட்டு பெறாதவர்கள் நேரில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டுகோள்.

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.

    காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்தாண்டு 9 கோவில்களில் விழா நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 12 கோவில்களில் சிவராத்திரி விழா!
    • ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் நடைபெறும் விழா!

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத் துறை தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு, கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், அருட்பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாத முனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச் சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்தும் சிறப்பு செய்து வருகிறது.

    மேலும், கடந்த ஆண்டு 9 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், பேரூர், பட்டீசுவரர் கோவில், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோவில் ஆகிய 9 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    2025-2026-ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, "9 கோவில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூடுதலாக, ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் ராமேசுவரம், அருள்மிகு ராமநாதசுவாமி கோவில், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களுடன் ஏற்கனவே மகாசிவராத்திரி விழா நடத்தப்பட்டு வரும் 9 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 12 கோவில்கள் சார்பில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

    • நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை.

    தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நீடிக்கிறது. கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், மளமளவென இடையில் சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான சூழலில் தங்கம் விலை பயணிக்கிறது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று விலை விறுவிறுவென ஏறுமுகத்தில் எகிறியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 580-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.

    நேற்று தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது. காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,600-க்கும் விற்பனையானது. மாலை தங்கம் விலை 2 முறையாக உயர்ந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து ரூ. 1,18,320-க்கும், கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ரூ.14,790-க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்தது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று 3-வது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,320

    10-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,640

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-02-2026- ஒரு கிராம் ரூ.300

    10-02-2026- ஒரு கிராம் ரூ.300

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    • பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும்.
    • இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. பகலில் வெப்பம், இரவில் குளிர், அதிகாலையில் பனிப்பொழிவு என்ற சூழலே இருந்து வருகிறது.

    இதன் தாக்கம் வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது. அதுவரை வறண்ட வானிலையே நிலவும். பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும். மூடு பனிப்பொழிவுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 20-ந்தேதிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்து, வெப்பம் அதிகரிக்கும்.

    கடல் சார்ந்த அலைவுகள் தற்போது சாதகமாக இருப்பதால், இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

    இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மழையை கொடுக்குமா? என்பது குறித்து தனியார் வானிலை ஆய் வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    பொதுவாக பிப்ரவரி மாதங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மழை பெய்து இருக்கிறதா? என்று பார்த்தால், தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு அதிகனமழை வரையிலும், 2021-ல் கடலோர மாவட்டங்களில் கனமழை வரையிலும் பதிவாகியுள்ளது. மேலும் 1947, 1956, 1961, 1999, 2011-ம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்துக்கு மழைக்கான சூழல் இல்லாமல் போனது. இதற்கு முன்பு 1944-ம் ஆண்டில் புயல் ஒன்று உருவாகியது. அது சென்னைக்கு தெற்கே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

    அந்த வகையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ் வுப் பகுதி. வலுப்பெறுமா? மழையை கொடுக்குமா? என்பது குறித்து வரும் நாட்களில்தான் தெரிய வரும் என்று கூறினார்.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஐயப்பன்தாங்கல்: மேட்டு தெரு, ஈவிபி பார்க், தனலட்சுமி நகர், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்ரமணி நகர், விஜிஎன் நகர், கருமாரி அம்மன் நகர்.

    அம்பத்தூர்: கல்லிக்குப்பம், ஓம் சக்தி நகர், கங்கை நகர், கணேஷ் நகர், அம்பத்தூர் சர்வீஸ் சாலை.

    • கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.
    • எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.

    இதுவரை ஆசிரியர்கள் மாணவர்கள் பேப்பரில் எழுதிய விடைத்தாள்களைப் பேனா கொண்டு திருத்தி வந்தனர். ஆனால் இனி அப்படி கிடையாது. மாணவர்கள் வழக்கம் போல விடைத்தாள்களில் தேர்வு தேர்வை எழுதினாலும், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள், அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர் திரையில் விடைத்தாள்களைப் பார்த்து திருத்தி மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த நடைமுறை, தற்போது நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.

    ஆனால் எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    இந்த புதிய முறையில் விடை திருத் தும் பணிக்காக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் நாளைக்குள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு 14 முதல் 16-ந் தேதி வரை ஆசிரியர்களுக்கு இதற்கான ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    • கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது.
    • தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றார்.

    சென்னை:

    கோவையில் அ.தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இபிஎஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 நாளுக்கு முன் பொதுவெளியில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை, இங்கு மது அருந்தக் கூடாது என அறிவுறுத்திய அதிமுக வட்டச் செயலாளர் சுரேஷ்குமார், நேற்று முன்தினம் (09.02.2026) இரவு 8.30 மணியளவில், கட்சி அலுவலகத்தில் கட்சிப் பணிகளை கவனித்து கொண்டிருந்தபோது, 5 நபர் கொண்ட கும்பல் புகுந்து கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    இச்சம்பவத்தில் கட்சியின் வட்ட செயலாளர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்டப் பாசறை இணைச் செயலாளர் ஈசா டி.செந்தில் ஆகியோர் மற்றும் தடுக்க வந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து, கட்சியினரைத் தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் துணிந்திருப்பதற்கு ஒரே காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் சட்டம் - ஒழுங்கைக் காக்கத் திராணியற்ற முதல்வரின் கையாலாகாத தி.மு.க. அரசுதான்.

    குற்றவாளிகளின், போதைப் பேர்வழிகளின் புகலிடமாக, சொர்க்க பூமியாக தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கட்சியினர் மீதும், பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.
    • ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய துணைத் தேர்தல் ஆணையர்கள் பன்வர் பிரகாஷ், மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் மற்றும் பலர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் கூறுகையில், "தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு சென்னை மற்றும் புதுச்சேரியை அடைந்துள்ளது," என்றார்.

    தேர்தல் ஆணைய குழுவினர் நாளை, நாளை மறுநாள் (பிப். 12 மற்றும் 13) சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 12ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) துணை கமிஷனர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவையான முன்னேற்பாடு பணிகள் நிறைவுபெற்ற பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    13-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    14-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    15-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15-ந்தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    இதனிடையே 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள்.
    • ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.

    ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்துவராது என முதலமைச்சர் அளித்த பேட்டி தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.

    முதல்வரின் கருத்தால் திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது, கட்சியின் தலைவர் என்ற முறையில் கருத்து கூறியுள்ளார் முதல்வர்.

    திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறியுள்ளார், இதனால், கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள். ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.

    காங்கிரசாரிடம் எந்த கலக்கமும் இல்லை, நாங்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள், விரைவில் முதல்வரை சந்திப்போம்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகு விரைவில் சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணிக்கம் தாகூர் தொடர்பான கேள்விக்கு எங்களுக்குள் உள்ள பிரச்சனையை நாங்கள் பேசி தீர்வு காண்போம் என பதில் அளித்தார்.

    • ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும்.
    • ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் ரூ.15,900 – ரூ.50,400 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை தொடர் விடுப்பு எடுத்து, சென்னையில் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

    ஆனால், அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததை உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடரும் நிலையில், அவர்களிடம் அரசு பேசாமல், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் பணி நீக்க உத்தரவுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு மாநில அளவில் ரகசியமாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

    ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாக இருந்துவரும் நிலையில், அக்கிராமங்களின் ஊராட்சி செயலாளராக இருந்துவரும் இவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் பணியவைக்க முயல்வது மிகத்தவறு.

    எனவே அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.

    சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகின்ற சட்டசபை தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.

    மேலாண்மைக் குழு அமைப்பாளர் - பொன். இராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்)

    இணை அமைப்பாளர் - எஸ்.ஆர்.சேகர் (மாநில பொருளாளர்)

    இணை அமைப்பாளர் - ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்)

    இணை அமைப்பாளர் - மா. வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்)

    இணை அமைப்பாளர் - மாலா செல்வகுமார் (மாநில பொதுச் செயலாளர், ஓபிசி அணி)

    இணை அமைப்பாளர் - எஸ்.ஆர். ராமப்பிரியன் (கட்சி உறுப்பினர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×