என் மலர்
சென்னை
- ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்படுகிறது.
- 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் செல்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்று வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடனும், அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 தளங்கள் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
இந்த மாவட்ட கலெக்டர் அலவலகக் கட்டிடம் 13.86 ஏக்கர் பரப்பளவில் (மாவட்ட ஆட்சியரகம் தவிர்த்து பிற அலுவலகம் அமைப்பதற்கான மொத்த இடப் பரப்பளவு 39.81 ஏக்கர்) பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2525 திட்டப் பணிகள் திறந்து வைக்கப்படுகின்றன. ரூ.81 கோடியே 59 லட்சத்து 24 ஆயிரம் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன.
ரூ.7 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டாரப் பொது சுகாதார ஆய்வக கட்டிடங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர் திட்டப் பணி ரூ.6 கோடியே 62 லட்சம் மதிப்பீடு திறக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் கட்டப்பட்டு உள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் திறக்கப்படுகிறது.
ரூ.386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
நாளை மறுநாள் (27-ந்தேதி) திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு, மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.631 கோடியே 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு ரூ.1400 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
243 முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் ரூ.571 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 312 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ரூ.63 கோடியே 74 ஆயிரம் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.1,400 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
இத்தகைய பல்வேறு திட்டங்களுக்குப் பெருமை சேர்த்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக இந்த கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மக்கள் எழுச்சி கொண்டுள்ளனர். அதனால், விழாக்கோலம் பூண்டுள்ளது.
- நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
29 மற்றும் 31-ந்தேதிகளில் தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதனிடையே, இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 29-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர்.
- கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே 2021 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. 2024 பாராளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை பலமான கூட்டணியுடன் சந்திக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா உருவாக்கினார்.
முன்கூட்டியே உருவான இந்த கூட்டணி அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவதில் டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மற்ற கட்சிகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ.க. 35 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி குழுப்பிய போது அவர் உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால் தனது தலைமையிலான இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.
முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.ம.மு.க., ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது அந்த கூட்டணியில் இல்லை. அதேபோல் தே.மு.தி.க.வும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனவே கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகின்றன.
இதற்கிடையில் கூட்டணியை உறுதிப்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது.
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த பிரசார பயணத்தை பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந்தேதி புதுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த இரு விழாக்களையும் ஒரு சேர நடத்தவும் இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் அழைக்கவும் முடிவு செய்து இருந்தார்கள்.
ஆனால் பிரதமர் மோடியின் வருகை உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு 9-ந்தேதி அமித்ஷா வருகை உறுதியாகி இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு கூட்டணி கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் சில கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடப்பதால் எந்தெந்த கட்சிகள் வரும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
- மாவட்ட பிதிநிதிகள் சத்தியவாணிமுத்து நகர் குஜலாத்தி, எண்ணூர் நேரு நகர் ஆனந்தசேகர், டி.எஸ்.கோபால் நகர் பாரதிராஜா.
- தகவல் தொழில் நுட்பப் பிரிவு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, அம்மா பேரவை உள்ளிட்டவைகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
திருவொற்றியூர் பகுதி அ.தி.மு.க. 4 ஆக பிரிக்கப்பட்டு புதிய பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு திருவொற்றியூர் கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டு வடக்கு பகுதி, தெற்கு பகுதி என கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பகுதி கழக பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவை வருமாறு:-
திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன்.
திருவொற்றியூர் வடக்கு பகுதி கழக அவைத் தலைவர் எர்ணாவூர் நேதாஜிநகர் வி.பரசுராமன், பகுதி செயலாளர் எண்ணூர் நெட்டுக்குப்பம் எம்.கே.கண்ணன் (முன்னாள் கவுன்சிலர்) பகுதி இணைச் செயலாளர் எண்ணூர் காட்டுக்குப்பம் ஹேம பிரியா, பகுதி துணைச் செயலாளர்கள் திருவொற்றியூர் சிவசக்தி நகர் 6-வது தெரு எல்.ஜெசிந்தா, சக்தி கணபதி நகர் தாமோதரன், பகுதி பொருளாளர் எண்ணூர் நெட்டுக்குப்பம் சச்சிதானந்தம்.
மாவட்ட பிதிநிதிகள் சத்தியவாணிமுத்து நகர் குஜலாத்தி, எண்ணூர் நேரு நகர் ஆனந்தசேகர், டி.எஸ்.கோபால் நகர் பாரதிராஜா.
திருவொற்றியூர் தெற்கு பகுதி அவைத் தலைவர் சி.பி.சி.எல்.நகர் முன்னாள் கவுன்சிலர் நாகப்பன், பகுதி செயலாளர் மணலிபாட சாலை தெரு சாரதி பார்த்தீபன்.
பகுதி இணைச் செயலாளர் மணலி பெரிய தோப்பு சித்ரவள்ளி, துணைச் செயலாளர்கள் சின்னசேக்காடு முன்னாள் கவுன்சிலர் குப்பம்மாள், மணலி எம்.ஜோசப், பகுதி பொருளாளர் ராஜா தோட்டம் வினோத்குமார் மாவட்ட பிரதிநிதிகள் சின்னசேக்காடு மேரி, மணலி முருகானந்தம் முல்லை கார்டன் ரத்தினம்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மஞ்சம்பாக்கம் சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அண்ணாமலைநகர் ரவிச்சந்திரன்.
மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்கள் நெட்டுக்குப்பம் ஜி.சாந்தா, முகத்துவார குப்பம் செல்வி, மோரை அஜிதா, பாலவேடு காமராஜ் நகர் தீபிகா. இதேபோல் மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, அம்மா பேரவை உள்ளிட்டவைகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் மேற்கு பகுதி 1 கிழக்கு வட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.கண்ணன் விடுவிக்கப்பட்டு, 1 கிழக்கு வட்ட கழக வட்ட செயலாளராக எண்ணூர் தாளங்குப்பம் லைபான் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிவரை 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில்,
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சாலைத் தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 மகிழுந்துகள் மீது மோதியதில் மகிழுந்துகளில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் ஆகும். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளின் டயர்கள் வெடிக்கும் நிலையில் உள்ளன என்றால் எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு தான் இந்த விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது.
- தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,820-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-12-2025- ஒரு கிராம் ரூ.244
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
21-12-2025- ஒரு கிராம் ரூ.226
20-12-2025- ஒரு கிராம் ரூ.226
- வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது.
- அடுத்த மாதம் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடைபெறும்.
இந்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள மக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (சனிக்கிழமை), 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), அடுத்த மாதம் 3-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கம் செய்யவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்யவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்யவும், படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த தினம்.
சென்னை:
நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,
மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை தழைத்துச் செழிக்க நற்போதனைகளை வழங்கி, அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
- கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதம் ஏற்பட்டது.
திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
இதேபோல் கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது. மங்களூர் விரைவு ரெயில், அசோகபுரம் காவிரி விரைவு ரெயில் காலதாமதமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
- உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார்.
- இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,
மன்னிப்பது மட்டுமே மகத்தான மனிதகுணம் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.
இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஆகும்.
இயேசு பிரான் போதித்ததைப் போலவே உலகில் அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்; கருணை காட்டுவோம். அதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.
- 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
சென்னை:
நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு முறையை ரெயில்வே வாரியம் அமல்படுத்தியது.
இதேபோல, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும். தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), சென்னை சென்டிரலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






