என் மலர்tooltip icon

    சென்னை

    • 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
    • முகவரி மாற்றம் கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி, அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (நாளை), 28-ந்தேதி (நாளைமறுநாள்) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

    இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

    சென்னை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 79 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் சென்று உரிய படிவங்களை வழங்கி பயனடையலாம். சிறப்பு முகாம்கள் சீராக நடக்கவும், இந்த திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினர்.

    • பா.ம.க. தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை.
    • மீறி அன்புமணியுடன் பேச்சு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே பா.ம.க.வில் தந்தை- மகனுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது.

    இந்த நிலையில், பா.ம.க.வுடனான கூட்டணிப் பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பா.ம.க. சமூகநீதிப் பேரவை பெயரில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

    * பா.ம.க. பெயரில் தேர்தல் கூட்டணி, அரசியல் முடிவுகளை ராமதாசே மேற்கொள்ள வேண்டும்.

    * பா.ம.க. தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை.

    * பா.ம.க.வுடனான கூட்டணிப் பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது.

    * மீறி அன்புமணியுடன் பேச்சு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.
    • சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம்

    நாம் வாழும் பூமியின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி கடல் தான். ஆசியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா என 7 கண்டங்களாக பிரிந்து கிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்பது கடல் அலைகள் தான்.

    ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வது தான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள் தான்.

    'அழகு எங்கு இருக்கிறதோ, அங்கு தான் ஆபத்தும் இருக்கும்' என்று கூறுவது போல், இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004.

    அதே ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எனும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளை பலமாக தாக்கியது.

    என்னமோ... ஏதோ... என கரையோர மக்கள் உயிர் பிழைக்க ஓடிய போதும் இரக்கமில்லாத சுனாமி அரக்கன் வயது வித்தியாசமின்றி ஏராளமானோரை வாரிச் சுருட்டிக் கொண்டான்.

    இதில் 14 நாடுகளிலும் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்தார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை.

    தமிழகத்தையும் இந்த சுனாமி விட்டுவைக்கவில்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டியது.

    சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள் மட்டும் மறையவில்லை.

    அன்றைக்கு சிறுவயதில் இறந்து போனவர்கள், உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு திருமணமாகி குடும்பமாக வாழ்ந்திருப்பார்கள். நடுவயதை ஒத்தவர்கள், பேரன், பேத்தி என்று வாழ்வை ரசித்து வந்திருப்பார்கள்.

    இறந்தவர்கள் என்றும் மீள முடியாது என்பது இயற்கையின் இரக்கமற்ற நியதி. 'காலங்கள் கரைந்து போனாலும் கண்ணீர் மட்டும் மறையவில்லையே' என மக்கள் இன்றும் ஏங்கும் அளவுக்கு உறவுகளை பிரித்துச்சென்று பெருந்துயரம் தந்த சுனாமி வந்து சென்று 21 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும், கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

    அந்த வகையில் சுனாமி தந்த சோகத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வசிக்கும் கடலோர மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி பல இடங்களில் கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி இறந்து போனவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
    • ‘பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும்.

    புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, சென்னை பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடற்கரையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதுதவிர கடற்கரை ஓரத்தில் நீச்சல் வீரர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

    மெரினா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    'பைக் ரேஸ்' என்ற பெயரில் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக சென்று, சாகசம் செய்வதை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    'பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    சாலையின் நடுவே 'கேக்' வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடந்த ஆண்டை போன்று கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட வேண்டும் என்றும், இதை மீறினால் ஓட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு எவ்வளவு நேரம் அனுமதிக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு பைக் ரேசில் ஈடுபட்டதாக 24 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
    • கிண்டியுடன் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் நேரடியாக இணைக்க உதவும்.

    சென்னை:

    சென்னையில் முதல் கட்டமாக பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடங்கள் வருகிற 2027-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர, ஒவ்வொரு வழித்தடத்திலும் தனித்தனியே நீட்டிப்பு சேவையும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் சென்னை ஐகோர்ட்டு (7 கி.மீ) வழித்தடம் 1-ல் தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி (21 கிலோ மீட்டர்) நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில், தென்சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட உள்ளது. இதற்காக சிஸ்ட்ரா எம்.வி.ஏ கன்சல்டிங் இந்தியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவர்கள் 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் சமர்பிக்க உள்ளனர். இதற்காக ரூ.96.19 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கிண்டியுடன் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் நேரடியாக இணைக்க உதவும். போக்குவரத்து நெரிசலற்ற விரைவான சேவையும் கிடைக்கும். தென்சென்னையில் தினசரி நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ வழித்தடம் ஒன்று நீட்டிப்பு சேவை இருக்கும். இது ஜி.எஸ்.டி சாலை, வேளச்சேரி ரோடு ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடியை குறைக்கும்.

    வேளச்சேரி, பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஏராளமான தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதனால் ஜி.எஸ்.டி ரோடு, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசல் மெட்ரோ ரெயில் சேவை மூலம் குறையும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

    • எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

    சென்னை:

    எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது, குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதமும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதியா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட ரெயில்களிலும் கட்டணம் உயர்ந்தது.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் அறிவித்த புதிய ரெயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தது.

    நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இன்று (26-ந்தேதி) முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் புதிய கட்டணம் பொருந்தும்.

    நாடு முழுவதும் ரெயில் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில் கட்டணங்களில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்ய உணவு பாதுகாப்புதுறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
    • தரமான மாவுகளை பயன்படுத்த, கை மற்றும் தலையில் உறைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பத்தில் தரம் இல்லை என பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் உணவு கட்டுப்பாடு துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்நிலையில், இனி இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறவேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை இதனைப் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தரமான மாவுகளைப் பயன்படுத்தவும், கை மற்றும் தலையில் உறைகள் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காய்ச்சல், நோய்த்தொற்று பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபடவும் உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

    • கிறித்துவ மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுந்தாக்குதல் உலகரங்கில் இந்திய நாட்டின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
    • மதவெறித் தாக்குதல்களை அம்மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்துகிறேன்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    உலகம் முழுமைக்கும் கிறிஸ்துமஸ் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், இந்தியப் பெருநாட்டில் கிறித்துவ மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுந்தாக்குதல் உலகரங்கில் இந்திய நாட்டின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

    என்ன செய்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம்? ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை கண்டனத்தைக்கூட தெரிவிக்காது, கள்ளமௌனம் சாதிப்பதேன்? வெட்கக்கேடு!

    ஒன்றியத்தில் பாஜக-வானது ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இசுலாமியர்கள், கிறித்துவர்கள், ஆதித்தொல்குடிகள், பழங்குடிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    அதன் நீட்சியே, தற்போது நடந்தேறிய கோரச்சம்பவங்களாகும். இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பெரும் தலைகுனிவாகும். இந்திய நாட்டின் ஒப்பற்ற மனித வளமோ, பூமிக்கடியில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளமோ, ஓங்கி உயர்ந்த மலைகளோ, குறுக்கும், நெடுக்குமாகப் பாயும் ஆறுகளோ இந்நாட்டின் பெருமிதங்கள் அல்ல; மதச்சார்பின்மையும், பன்மைத்துவமும்தான் இந்நாட்டின் உயரிய அடையாளங்கள். அதனை மொத்தமாகச் சிதைத்தழிக்கும் வகையிலான மதவெறிச்செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

    உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா என பாஜக ஆளும் மாநிலங்களில் கிறித்துவ, இசுலாமியப் பெருமக்கள் மீது தொடரும் மதவெறித்தாக்குதல்களெல்லாம் திட்டமிடப்பட்ட இனஒதுக்கல் கோட்பாட்டின் செயல்வடிவமேயாகும். அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும், வழிபடவும், தங்களது மதம்சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடவுமான அடிப்படை உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

    அந்த உரிமையையே முற்றாக மறுத்து, மதவெறித்தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தும் மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. மதவெறியர்களின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மைச் செயல்பாடுகள் மன்னிக்கவே முடியாத படுபாதகமாகும்.

    'தாங்கள் வாழ்கிற நாட்டைவிட சார்ந்திருக்கிற மதமே பெரிதென எண்ணிக்கொண்டு செயல்படத் தொடங்குவார்களேயானால் நாடு சுக்குச் சுக்காகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது' எனும் அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கையைத்தான் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு இச்சமயத்தில் நினைவூட்டுகிறேன்.

    ஆகவே, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கிறித்துவ மக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித் தாக்குதல்களை அம்மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அதனை உறுதி செய்யவும் வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • நத்தம் விசுவநாதன், ஊ. பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், டி. ஜெயக்குமார்.
    • சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான

    தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, அதிமுக சார்பில் பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.

    நத்தம் விசுவநாதன், ஊ. பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன்

    மேற்கண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வவேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

    • NDA-வில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது.
    • தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்த காய் நகர்த்தி வருகின்றன.

    இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ள நிலையில், தமிழக பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் கடந்த வாரம் சென்னை வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்பின் போது கூட்டணிக்கு வரவுள்ள புதிய கட்சிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், பாமகவிற்கு 23 தொகுதிகளும், தேமுதிக-விற்கு 6 தொகுதிகள் என தகவல் வெளியானது.

    ஆனால் இந்த தகவலை அதிமுக மற்றும் பாஜக மறுத்தது. தவறான தகவல் என விளக்கம் அளித்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேமுதிக சார்பாக நடைபெற்ற விழாவில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பியூஸ் கோயல் இபிஎஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்ததாவது:-

    அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதிமுக- பாஜக இரண்டும்தான் தற்போது கூட்டணியாக உள்ளனர். அன்றைய கூட்டத்திற்கு பிறகு இந்தந்த கட்சிக்கு இத்தனை சீட்டு என்று அதிகாரப்பூர்வமாக யார் வந்து பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார்கள்.

    அதிகாரப்பூர்வமாக அந்த லிஸ்டை யார் கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அதன் பின்னர் பதில் சொல்கிறேன். சமூக வலைதள மூலமாக அன்று வெளியான அந்த ஒரு செய்தியை வைத்துக்கொண்டு அன்று முழுவதும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.

    ஜனவரி 9 மாநாடு அன்று யாருடன் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன். நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவு எடுப்போம்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

    • எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.
    • கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

    பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

    மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

    எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! என்று கூறியுள்ளார். 



    • ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
    • சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.

    வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×