என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி. கட்டாயம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி. கட்டாயம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும்.
    • 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆதார் அட்டை இணைப்பு முறையை ரெயில்வே வாரியம் அமல்படுத்தியது.

    இதேபோல, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்ட்டர் உட்பட அனைத்து வகையான தட்கல் முன்பதிவு வழிகளிலும் இந்த புதிய வசதி பொருந்தும். தட்கல் முன்பதிவுகளை உறுதிசெய்வதும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான சிறந்த அணுகலை வழங்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதன்படி, தற்போது 5 ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12656), சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12842), சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), சென்னை சென்டிரலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22160), ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158) ஆகிய 5 ரெயில்களில் கடந்த 23-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கடவுச்சொல் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×