என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி வாட்ஸ் அப் வீடியோ மூலம் சிக்கியதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எரவான்குடியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேல்முருகன் (வயது 48) என்பவர் பணியாற்றி வந்தார். அவரிடம முருகன்கோட்டையை சேர்ந்த ஜான் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட வேல்முருகன், பட்டா கொடுப்பதற்கு ஜானிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஜான், வேல்முருகனுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். அதனை அங்கு மறைந்து இருந்த நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்து, வாட்ஸ் அப்பில் பரவவிட்டார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனா குமாரி, சம்பவம் குறித்து விசாரணை நடத்த வட்டாட்சியர் திருமாறனுக்கு உத்தரவிட்டார். அவர் ஜான் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன், மற்றும் உதவியாளர் ஆகி யோரிடம் விசாரணை நடத்தி அது குறித்த அறிக்கையை கோட்டாட்சியர் டீனா குமாரியிடம் சமர்ப்பித்தார். அதில் வேல்முருகன் லஞ்சம் வாங்கியது தெரியவரவே, அவரை சஸ்பெண்டு செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
    அரியலூர் அருகே பள்ளி திறந்த ஒரு வாரத்திலேயே 3-ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஆசிரியரை சஸ்பெண்டு செய்து அதிகாரி உத்தரவிட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இடையார் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (வயது 48) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இங்கு தத்தனூரை சேர்ந்த சோழராஜன் மகன் தீபக் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று ஆசிரியர் மேகநாதன் 3-ம் வகுப்பிற்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது தீபக் அடிக்கடி தண்ணீர் குடித்துள்ளான். இதைக்கண்ட மேகநாதன், தீபக்கை தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் தீபக் சத்தம் போட்டுள்ளான். சத்தத்தை கேட்டு அருகில் இருந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சாமிதுரை மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சென்றனர். பின்னர் ஆசிரியர் மேகநாதனிடம் தட்டிக்கேட்டனர்.

    அப்போது அவர் தகாத வார்த்தையால் பேசி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேகநாதனை வகுப்பறையில் வைத்து பூட்டினர். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்ய கோரி பொதுமக்கள் சிதம்பரம்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தகாதவார்த்தையால் பேசி தாக்குதல் நடத்திய ஆசிரியர் மேகநாதனை பணியிடை நீக்கம் செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அனந்த நாராயணன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் ஆசிரியர் மேகநாதனை பணியிடை நீக்கம் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிதம்பரம்-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாணவன் தீபக்கை தாக்கிய ஆசிரியர் மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூரில் இலவச கல்விக்கு பணம் கேட்ட கல்லூரியை கண்டித்து மாவட்ட கலெக்டரிடம் பிச்சை எடுத்து வசூல் செய்த மாணவர்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    படித்து முடித்தற்கான சான்றிதழ் பெறுவதற்கு பணம் கேட்பதாக அரியலூர், அருகேயுள்ள தனியார் கல்வியியல் கல்லூரி மீது புகார் எழுந்தது.

    அந்த தனியார் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரனிடம், கல்லூரியில் படித்த திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி மாணவர்கள் கூறுகையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் போத்திரமங்கலம், சிறுமுளை உள்ளிட்ட பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அரியலூர் மாவட்டம் தனியார் கல்வியியல் கல்லூரியில் 2014- 2016 ஆம் கல்வி ஆண்டில் பயின்றுள்ளோம்.

    கல்லூரி நிர்வாகம் தங்கள் பகுதியில் வந்து எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எதுவும் கிடையாது என்றும், எங்கள் கல்லூரியில் சேர்ந்த படியுங்கள் என்று கூறி எங்கள் வீட்டிலேயே வந்து எங்களது பன்னிரெண்டாம் வகுப்பு டி.சி. மற்றும் மார்க் லிஸ்ட்டை அப்போதே வாங்கிச் சென்றனர்.

    நாங்களும் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். படிக்கும்போது பல்வேறு வகையில் சிறுக, சிறுக பணம் வசூல் செய்து விட்டனர். தற்பொழுது நாங்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு எங்களது கல்லூரி சான்றுகளை பெறுவதற்கு சென்ற போது கல்லூரிக்கு கட்டவேண்டிய பாக்கி ரூ.50 ஆயிரத்தை கட்டி விட்டு சான்றிதழ்களை பெற்றுச் செல்லுங்கள் என கூறினர்.

    இதுகுறித்து அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நாங்கள் எங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள எங்களுக்கு பிச்சை போடுங்கள் என தட்டு ஏந்தி சென்று மாவட்ட கலெக்டர் (பொ) தனசேகரனிடம் மனு கொடுத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

    இது குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விளாகம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அப்போது காளைகள் முட்டியதில் 52 பேர் காயமடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விளாகம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஊரின் நடுவீதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 450 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது, காளைகள் முட்டியதில் 52 பேர் காயமடைந்தனர். அதில் படுகாயமடைந்த கல்லக்குடி பிரேம்குமார்(23), ஊவனூர் இளம்பருதி(30), கோவண்டாகுறிச்சி  மார்ட்டின்(32), கோவில் எசனை சிலம்பரசன்(28) மேலும், ஜல்லிக்கட்டு பார்த்துகொண்டிருந்த போது கீழே விழுந்து காயமடைந்த  இலந்தைகூடம் பொன்னுசாமி(65) ஆகிய 5 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள்,  உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
    குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டியதில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஷாம் (வயது 32 ). இவர் சென்னையில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு ஷாம், 3 பேரை சவாரி ஏற்றுக்கொண்டு விழுப்புரத்திற்கு புறப்பட்டார். அப்போது அவருடன் அவரது நண்பர் சென்னையை சேர்ந்த சரவணன் (37) என்பவரும் உடன் சென்றார்.

    விழுப்புரம் வந்ததும் 3 பேரையும் இறக்கி விட்ட அவர்கள் , காரில் வைத்து மது அருந்தியுள்ளனர். பின்னர் தஞ்சாவூருக்கு புறப்பட்டனர். போதை மயக்கத்தில் ஷாம் காரை ஓட்டினார்.

    ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே செல்லும் போது தாறுமாறாக ஓடிய கார், அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய  குன்றத்தூர் வாணியத் தெருவை சேர்ந்த முதியவர் முருகானந்தம்  என்பவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனிடையே முருகானந்தம் மீது மோதிய ஷாம், காரை நிறுத்தாமல் சென்று விட்டார். அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்நிலையில்  ஜெயங்கொண்டம் அடுத்த அணைக்கரை பகுதியில் வேகமாக சென்ற கார், அந்த வழியாக சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் மாட்டு வண்டியில் பயணித்த கடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்த கொளஞ்சி (38), புதுச்சாவடி செல்லத்துரை,அவரது மனைவி தனம் (37) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். 2 மாடுகளின் கால்கள் முறிந்தன. அப்போதும் ஷாம் காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.

    பின்னர் ஜெயங்கொண்டம் பின்னவளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த காரின் டயர் வெடித்தது.இதில் தாறுமாறாக ஓடிய கார் ஏரிக்கரைக்குள் பாய்ந்து நின்றது. இதையடுத்து பொதுமக்கள் காரில் இருந்த ஷாம், சரவணன் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மீன்சுருட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    குடிபோதையில் இருந்ததால் இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி பகுதிகளில் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கண்டமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல்(32). இவர் கடந்த 11-ம் தேதியன்று சென்னை செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது குண்டவெளியை சேர்ந்த ராஜசேகர்(51) என்பவர் மிரட்டி அவர் பையில் இருந்த ரூ.2ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார்.

    இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குபதிந்து ராஜசேகரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராஜசேகர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும்  வகையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், அரியலூர்  மாவட்ட எஸ்.பி. அணில்குமார் கிரி ஆகியோர் பறிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர்(பொ) தனசேகரன் ராஜசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
    பள்ளிக்கு ஒழுங்காக வராததால் ஆசிரியரை இடைநீக்கம் அல்லது இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வஞ்சின புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள  அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    மாணவர்களுக்கு பயிற்றுவிக்க  பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கொளஞ்சியப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். பள்ளிக்கு வந்தாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு உடனே தன் சொந்த வேலையினை பார்க்க சென்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இது குறித்து  மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் ஆசிரியர் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை  என கூறப்படுகிறது.

    இதனையடுத்து பள்ளிக்கு ஒழுங்காக வராமல், வந்தாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் இருக்கும் ஆசிரியர் கொளஞ்சியப்பனை  இடைநீக்கம் அல்லது  இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் கையில் வெற்றிலை,பாக்கு தட்டுடன் வந்து  பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் பள்ளிக்கு வந்த ஆசிரியர் கொளஞ்சியப்பனுக்கு தாம்பூல தட்டினை கொடுத்து வழியனுப்பி வைக்க முயன்றனர். தகவலறிந்த தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இனிமேல் கொளஞ்சியப்பன் தவறாமல் பள்ளிக்கு வருவதாக ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், தவறினால் அவர் மீது பள்ளி சார்பில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பெற்றோர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மொபட்டில் சென்ற மைத்துனர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலினார்கள்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அழகப்பன் மகன் முருகன் (வயது 35), தனியார் ஏஜென்சியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருடைய மைத்துனர் சின்னபிள்ளை மகன் பழனிவேல் (50). இவர் அதேஊரில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.

    இருவரும் நேற்று இரவு முருகனுக்கு சொந்தமான மொபட்டில் சின்னவளையத்திலிருந்து மீன்சுருட்டி செல்வதற்காக பொன்னேரி கரை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தையும் போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களில் அம்மா திட்ட முகாம் 9-ந் தேதியன்று வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களில் அம்மா திட்ட முகாம் 9-ந் தேதியன்று வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    முகாம் நடைபெறும் இடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-உடையார்பாளையம் வட்டத்தில்-தா.பழூர், உல்லியக்குடி கிராமங்களிலும், அரியலூர் வட்டத்தில்- சிறுவளுர் கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில்- கொடுக்கூர் கிராமத்திலும், நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத் திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

    வேலை நிமித்தமாகவும், போக்குவரத்திற்காகவும் வெளியே செல்கிறவர்கள் வெயிலை தாங்கி கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்நிலையில் அரியலூரில் நேற்று பகலில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது .மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதன் பின்னர் லேசாக தூற ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல சூறைக்காற்றுடன் பலமாக பெய்தது. இந்த மழையானது இரவு வரை நீடித்தது.

    அரியலூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக ராஜூநகர், மின்நகர், அரியலூர் புறவழிச்சாலை, கலெக்டர் அலுவலக பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    வீடுகளில் வைக்கப்பட்டிருந்த வாழை, முருங்கை, தென்னை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்தன. ஆங்காங்கே மின்கம்பியும் அறுந்து விழுந்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    அரியலூர் அருகே புதிதாக அமையவுள்ள மதுபான கடை மற்றும் மதுபான கூடத்திற்கு அனுமதியளித்ததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர்-ராவுத்தன் பட்டி சாலையில் புதிதாக அமையவுள்ள மதுபான கடை மற்றும் மதுபான கூடத்திற்கு அனுமதியளித்ததை கண்டித்து கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இப்பகுதியில் டாஸ்மாக் அமைப்பதை அறிந்த பொதுமக்கள் இந்த கடையை திறக்ககூடாது என வலியுறுத்தி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் இப்பகுதியில் டாஸ்மாக் அமைக்கபடாது என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஏற்கனவே கல்லங்குறிச்சி சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கடை அமைந்துள்ள நிலையில் மீண்டும் அரியலூர் பகுதியில் டாஸ்மாக் அமைப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் அமையவுள்ள இடம் அருகிலே திருமண மண்டபம் மற்றும் பைபாஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து இப்பகுதி பெண்கள் கூறுகையில் இங்கு 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த சாலைகள் வழியாக தான் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் செல்கின்றனர். இந்த பகுதியில் டாஸ்மாக் அமைந்தால் இரவு நேரங்களில் எங்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கும் எனவும் இப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டினார்.

    எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் அமைக்க கூடாது என இப்பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மாடுகள் வளர்ப்பதனால் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடிந்தது. தற்போது மாட்டிறைச்சிக்கு தடை செய்யப்பட்டதால் மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

    எனவே இந்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டு மென வலியுறுத்தினர்.

    ×