search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளை மாடு"

    • போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிவந்த காளை மாட்டை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், பெரியார்நகர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பெரிய காளை மாடு ஒன்று நெடுஞ்சாலையில் சுற்றி வந்தது. சாலையில் செல்லும் வாகனங்கள், மாநகர பஸ்களை மறித்து நிற்பது வாடிக்கையாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர். மேலும் விபத்தில் சிக்குவதும் நீடித்து வந்தது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிவந்த காளை மாட்டை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க வரும்போது அந்த காளைமாடு டிமிக்கி கொடுத்து தப்புவது வாடிக்கையாக இருந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த காளைமாடு சாலையில் "ஹயாக"சுற்றி அனைவருக்கும் போக்கு காட்டியது.

    இந்த நிலையில் மண்டல சுகாதார அலுவலர்கள் அன்பழகன், சீனிவாச பாலகிருஷ்ணன் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயா ஆகியோர் மேற்பார்வையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 10 பேர் இன்று காலை பெரியார் நகரில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அந்த பெரிய காளை மாட்டை சுற்றி வளைத்தனர்.

    அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து தப்ப முயன்ற போது காளை மாட்டை கயிறு கட்டி லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை டிராலி மூலம் லாரியில் ஏற்றி பெரம்பூரில் உள்ள கால்நடை காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • கட்டியாபட்டு மலை கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து நேற்று நள்ளிரவில் பெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
    • 48 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே சுமார் 84 மலை கிராமங்கள் உள்ளன. இதில் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டு 47 குக்கிராமங்கள் உள்ளது.

    பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் சுயம்பாக அமைந்துள்ள பெருமாள் வடிவிலான புற்றை தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.

    அதேபோல், மற்ற பகுதிகளில் ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவிழாவை போன்று இது இல்லை.

    இங்கு பூஜை செய்யும் நபருக்கும், அவர் கூறும் ஊரில் உள்ள ஏதேனும் ஒரு காளைக்கும் ஒரே நேரத்தில் சாமி அருள் வந்து அருள்வாக்கு கூறினால் மட்டுமே திருவிழா நடைபெறும்.

    இல்லையென்றால் பூசாரி மற்றும் காளை மாடு உத்தரவு தரும் வரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருவிழா நடக்காது.

    கடந்த 2003-ம் ஆண்டு அருள்வாக்கு கிடைத்ததால் திருவிழா நடைபெற்றது. அதற்கு பிறகு காளையின் சம்மதம் கிடைக்காததால் திருவிழா நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு கோவில் பூசாரி அருள்வாக்கு கூறினார். அதே நேரத்தில் பூசாரி கூறிய மலை கிராமத்தை சேர்ந்த ஒரு காளை மாடு தலையை அசைத்து திருவிழா நடத்த அருள்வாக்கு கூறியது.

    இதனையடுத்து திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி, ஒடுகத்தூர் அடுத்த கட்டியாபட்டு மலை கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து நேற்று நள்ளிரவில் பெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக அருள் வந்த காளையை அலங்கரித்து அதனை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    பின்னர், கோவிலில் உள்ள புற்றுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    அப்போது, 48 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மேலும், அருள் வந்த காளைக்கு படையலிட்டு அதனிடம் மலைவாழ் மக்கள் வாக்கு கேட்டனர். அதேபோல், கொடிமரத்தில் நெய்விளக்கேற்றி சாமியை வழிபட்டனர்.

    இதில், காணிக்கை கொடுத்த 47 கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    கடந்த 2003-ம் ஆண்டு நடத்தப்பட்ட திருவிழா சுமார் 20 வருடம் கழித்து தற்போது திருவிழா நடத்த உத்தரவு கிடைத்துள்ளது. கடந்த 48 நாட்களுக்கு முன் காளைக்கு அருள் வந்து வாக்கு கேட்டு திருவிழா தேதி குறிக்கப்பட்டது.

    பின்னர், அருள் வாக்கில் சொன்னபடி முதலில் காளையை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு கால்நடையாக கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    பின்னர் 44 பேர், 7 நாட்களாக 47 குக்கிராமங்களுக்கும் நடைபயணமாக சென்று திருவிழா நடத்த காணிக்கை திரட்டினர்.

    இவை 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று இரவு தான் நடந்தது. மீண்டும் காளைக்கு அருள் வந்தால் மட்டுமே திருவிழா நடக்கும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறினர்.

    • ‘ஹாரன்’ அடித்தால் முகப்பு விளக்கை உடைத்து சேதமாக்குகிறது.
    • பொதுமக்கள் யாரேனும் விரட்ட நினைத்தாலும் முடியாது.

    திருவொற்றியூர் :

    சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெரியார் நகர் முதல் திருவொற்றியூர் மார்க்கெட் வரை காளை மாடு ஒன்று பல நாட்களாக சுற்றித்திரிகிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் இந்த காளை மாடு, வேண்டுமென்றே அந்த வழியாக செல்லும் பஸ்களை வழி மறித்து நடுரோட்டில் நிற்கும்.

    அருகில் உள்ள பொதுமக்கள் யாரேனும் விரட்ட நினைத்தாலும் முடியாது. சுமார் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை சாலையின் குறுக்கே பஸ்சை வழிமறித்து நின்றுவிட்டு பின்னர் தானாகவே அங்கிருந்து விலகி சென்று பஸ்களுக்கு வழி விடுகிறது. காளை மாட்டின் இந்த வம்பு, பல நாட்களாக தொடர்ந்து வருகிறது.

    அந்த காளை மாட்டை பற்றி தெரிந்த டிரைவர்கள், பஸ்சை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் தெரியாத பஸ் டிரைவர்கள், பஸ்சை திருப்பிச்செல்லும் நோக்கில் தொடர்ந்து இயக்கினாலோ அல்லது 'ஹாரன்' அடித்தாலோ கோபம் அடையும் காளை மாடு, பஸ்சின் முகப்பு விளக்குகளை தலையால் முட்டி இடித்து சேதமாக்கிவிடுகின்றது.

    வம்பு செய்யும் இந்த காளை மாட்டை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் காளை மாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×