search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 ஆண்டுகளுக்கு பிறகு காளை மாடு அருள்வாக்கால் நடந்த வினோத திருவிழா
    X

    அருள்வாக்கு கூறிய காளையை அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து வந்த காட்சி.

    20 ஆண்டுகளுக்கு பிறகு காளை மாடு அருள்வாக்கால் நடந்த வினோத திருவிழா

    • கட்டியாபட்டு மலை கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து நேற்று நள்ளிரவில் பெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
    • 48 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே சுமார் 84 மலை கிராமங்கள் உள்ளன. இதில் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டு 47 குக்கிராமங்கள் உள்ளது.

    பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் சுயம்பாக அமைந்துள்ள பெருமாள் வடிவிலான புற்றை தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.

    அதேபோல், மற்ற பகுதிகளில் ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவிழாவை போன்று இது இல்லை.

    இங்கு பூஜை செய்யும் நபருக்கும், அவர் கூறும் ஊரில் உள்ள ஏதேனும் ஒரு காளைக்கும் ஒரே நேரத்தில் சாமி அருள் வந்து அருள்வாக்கு கூறினால் மட்டுமே திருவிழா நடைபெறும்.

    இல்லையென்றால் பூசாரி மற்றும் காளை மாடு உத்தரவு தரும் வரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருவிழா நடக்காது.

    கடந்த 2003-ம் ஆண்டு அருள்வாக்கு கிடைத்ததால் திருவிழா நடைபெற்றது. அதற்கு பிறகு காளையின் சம்மதம் கிடைக்காததால் திருவிழா நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு கோவில் பூசாரி அருள்வாக்கு கூறினார். அதே நேரத்தில் பூசாரி கூறிய மலை கிராமத்தை சேர்ந்த ஒரு காளை மாடு தலையை அசைத்து திருவிழா நடத்த அருள்வாக்கு கூறியது.

    இதனையடுத்து திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி, ஒடுகத்தூர் அடுத்த கட்டியாபட்டு மலை கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து நேற்று நள்ளிரவில் பெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக அருள் வந்த காளையை அலங்கரித்து அதனை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    பின்னர், கோவிலில் உள்ள புற்றுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    அப்போது, 48 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மேலும், அருள் வந்த காளைக்கு படையலிட்டு அதனிடம் மலைவாழ் மக்கள் வாக்கு கேட்டனர். அதேபோல், கொடிமரத்தில் நெய்விளக்கேற்றி சாமியை வழிபட்டனர்.

    இதில், காணிக்கை கொடுத்த 47 கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    கடந்த 2003-ம் ஆண்டு நடத்தப்பட்ட திருவிழா சுமார் 20 வருடம் கழித்து தற்போது திருவிழா நடத்த உத்தரவு கிடைத்துள்ளது. கடந்த 48 நாட்களுக்கு முன் காளைக்கு அருள் வந்து வாக்கு கேட்டு திருவிழா தேதி குறிக்கப்பட்டது.

    பின்னர், அருள் வாக்கில் சொன்னபடி முதலில் காளையை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு கால்நடையாக கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    பின்னர் 44 பேர், 7 நாட்களாக 47 குக்கிராமங்களுக்கும் நடைபயணமாக சென்று திருவிழா நடத்த காணிக்கை திரட்டினர்.

    இவை 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று இரவு தான் நடந்தது. மீண்டும் காளைக்கு அருள் வந்தால் மட்டுமே திருவிழா நடக்கும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறினர்.

    Next Story
    ×