என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே  நடுரோட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதி முதியவர் பலி: 3 பேர் படுகாயம்
    X

    ஜெயங்கொண்டம் அருகே நடுரோட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதி முதியவர் பலி: 3 பேர் படுகாயம்

    குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டியதில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஷாம் (வயது 32 ). இவர் சென்னையில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு ஷாம், 3 பேரை சவாரி ஏற்றுக்கொண்டு விழுப்புரத்திற்கு புறப்பட்டார். அப்போது அவருடன் அவரது நண்பர் சென்னையை சேர்ந்த சரவணன் (37) என்பவரும் உடன் சென்றார்.

    விழுப்புரம் வந்ததும் 3 பேரையும் இறக்கி விட்ட அவர்கள் , காரில் வைத்து மது அருந்தியுள்ளனர். பின்னர் தஞ்சாவூருக்கு புறப்பட்டனர். போதை மயக்கத்தில் ஷாம் காரை ஓட்டினார்.

    ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே செல்லும் போது தாறுமாறாக ஓடிய கார், அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய  குன்றத்தூர் வாணியத் தெருவை சேர்ந்த முதியவர் முருகானந்தம்  என்பவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனிடையே முருகானந்தம் மீது மோதிய ஷாம், காரை நிறுத்தாமல் சென்று விட்டார். அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்நிலையில்  ஜெயங்கொண்டம் அடுத்த அணைக்கரை பகுதியில் வேகமாக சென்ற கார், அந்த வழியாக சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் மாட்டு வண்டியில் பயணித்த கடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்த கொளஞ்சி (38), புதுச்சாவடி செல்லத்துரை,அவரது மனைவி தனம் (37) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். 2 மாடுகளின் கால்கள் முறிந்தன. அப்போதும் ஷாம் காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.

    பின்னர் ஜெயங்கொண்டம் பின்னவளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த காரின் டயர் வெடித்தது.இதில் தாறுமாறாக ஓடிய கார் ஏரிக்கரைக்குள் பாய்ந்து நின்றது. இதையடுத்து பொதுமக்கள் காரில் இருந்த ஷாம், சரவணன் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மீன்சுருட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    குடிபோதையில் இருந்ததால் இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×