என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஆயாகுளம் ஏரியில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கள்ளாத்தூரை சேர்ந்தவர் ரவி (வயது 50) கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி.. ரவிக்கு குடிபழக்கம் உண்டு. இவர் கடந்த 17-ந் தேதி காலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் போதையில் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. 

    இந்நிலையில் இன்று காலை கள்ளாத்தூர் அருகே உள்ள ஆயாகுளம் ஏரியில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் ஏரியில் பிணமாக மிதந்தது ரவி என்பது தெரியவந்தது. குடி போதையில் ரவி தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் எழுத்தர் பணி செய்பவர் கார்த்திகா (38) இவர் நேற்று முன்தினம் மாலை போலீஸ் நிலையத்தில் பணிசெய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (22) அதே ஊரை சேர்ந்த பழனிசாமி மகன் ராஜசேகர்(22) விவசாய கூலி தொழிலாளி ஆகிய இருவரும் குடிபோதையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் கார்த்திகா என்பவரிடம் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. 

    இதுகுறித்து கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிந்து மாரியப்பன், ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார். #tamilnews
    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமைவாய்ந்ததும், தமிழ்நாடு சுற்றுலாதலங்களில் ஒன்றானதுமான அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தமிழ் அன்னையாய் வடிவமைக்கப்பட்டுள்ள அன்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல், இந்தாண்டும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆலயத்தின் முன்புள்ள வளாகத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவுக்கு பங்கு தந்தை சுவைக்கின் தலைமை தாங்கினார். அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். உதவி பங்குதந்தை திமோத்தி வரவேற்றார்.

    விழாவில் அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன் பொங்கல் பானையில், பச்சரிசியையும் பாலையும் ஊற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து இருங்கலூர் பங்கு தந்தை அகஸ்டின் தலைமையில், பொங்கல் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பொங்கல் விழாவில் திருமானூர் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வந்திருந்து அன்னையின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடி சென்றனர். #tamilnews
    அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு பணியாளர்சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) சார்பில் 21மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீன்டும் நடைமுறைபடுத்த கோரியும், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும், சமவேலைக்கு சமஊதியத் துடன் காலமுறை ஊதியம் வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார். மாநில தலைவர் கவியரசன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், அழகுவேல், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந் திரன், கண்ணதாசன் மற்றும் பாலசுப்பிரமணியன், ஏழு மலை, பெரம்பலூர் மாவட்ட தலைவர் மருதமுத்து, பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

    கர்நாடக முதல்வர் சித்தராமையா எந்த சூழ்நிலையிலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என கூறியது அடிவயிற்றில் இடி விழுந்தது போல் உள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார்.
    செந்துறை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

    தாய் பெரியம்மாள் மற்றும் குடும்பத்தினர், கிராம பொதுமக்கள், கட்சி தொண்டர்களுடன் சமத்துவ பொங்கலை மாரியம்மன் கோவில் அருகே வண்ண கோலமிட்டு, கரும்பு, தோரணங்கள் கட்டி பொங்கல் வைத்தனர்.

    விழாவில் கலந்துகொண்ட திருமாவளவன் வேட்டி, அணிந்து பொங்கலிட்டார். கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி, தமிழக மக்களுக்கு நல்லதொரு ஒளி மயமான காலம் உருவாக வேண்டும். சாதி, மதவாதத்திலிருந்தும், ஊழல் முறைகேடுகளிலிருந்தும் தமிழகம் மீளவேண்டும், இந்த பொங்கல் திருநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விவசாய குடும்பங்கள், கால்நடைகள் வளர்ப்பவர்கள் பாரம்பரியமாக இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்.

    விவசாயத்தை பாதுகாக்க இந்த நாளில் நாம் அனைவரும் சூளுரை ஏற்போம். தமிழ் சமூகம் கொண்டாடுகின்ற இந்த நாளில் கர்நாடக முதல்வர் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என கூறியது அடிவயிற்றில் இடி விழுந்தது போல் உள்ளது.



    தை முதல் நாளுக்கு அவர் வாழ்த்து சொல்வதற்க்கு மாறாக வேதனையூட்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சொல்லியிருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது.

    இதற்கு தமிழக முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கவிஞர் வைரமுத்து கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக அவரே மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் அதை ஏற்காமல் எச்.ராஜா அநாகரீகமாக வெளியிட்ட கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இதனை தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது சமூக நல்லிணத்திற்க்கு உகந்தது அல்ல. அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகள் பிரச்சினையில் தமிழக நீதிபதி கர்ணனை விசாரிக்காமலேயே சிறையில் வைத்தனர். தற்போது இதே போலதான் இந்த நீதிபதிகள் குற்றச்சாட்டு வைக்கிறனர்.

    இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகள் சேர்ந்து ஊடகம் வாயிலாக தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். காலம் காலமாக இத்தகைய முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள், அரசியல் குறுக்கீடுகள் நீதி நிர்வாகத்தில் இருந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலைதான் தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் நீதியின் கடைசி அறன் உச்சநீதிமன்றம்தான், ஆனால் அங்கேயே ஊழல், முறைகேடுகள், அரசியல் தலையீடுகள் தலை விரித்தாடுகின்றன. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

    தமிழகத்தில் மதம், ஜாதி வெறியாட்டத்தை தூண்டும் வகையில் சில சக்திகள் முயற்சித்து வருகின்றது. இது மதசார்பற்ற மண் என்பதை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருமானூர் அருகே சொத்து தகராறில் கோவில் பூசாரி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே  உள்ள கண்டிராதீர்த்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மூக்கன் (வயது 84). இவரது மனைவி தர்மம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை. எனவே மூக்கன் தனது தம்பி பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். மூக்கன் அதே கிராமத்தில்  உள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

    இதற்கிடையே மூக்கனுக்கு சொந்தமான விவசாய நிலம்  மற்றும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவற்றை பெறுவதில் தம்பி பிள்ளைகளுக்கிடையே கடுமையான போட்டி இருந்துள்ளது. இதுதொடர்பாக  அவர்கள் மூக்கனிடம் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளனர். 

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக  தூங்கிக்கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு மூக்கன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே இதுகுறித்து அவர்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பார்த்தபோது வீட்டிற்கு பிணமாக கிடந்த மூக்கன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை  மர்ம  நபர்கள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.  அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சொத்து தகராறில் மூக்கனின் தம்பி பிள்ளைகள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  மேலும்  சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தினர். #tamilnews
    ஜெயங்கொண்டம் அருகே ஏரி ஒன்றில் மூதாட்டி ஒருவர் இறந்து மிதந்து கிடந்தார். தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள சம்போடை கிராமத்தில் உள்ள ஏரி ஒன்றில் நேற்று மதியம் மூதாட்டி ஒருவர் இறந்து மிதந்து கிடந்தார். தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். 

    விசாரனையில் இறந்து கிடந்தவர் மேலசெங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த பூராசாமியின் மனைவி விருத்தாம்பாள்(70) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மீன்சுருட்டி போலீசார் இறந்தவரின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    திருமானூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல பூசாரி பூஜைகளை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று கோவிலை பராமரித்து வரும் நபர்கள் கோவிலை சுத்தம் செய்ய சென்றனர். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதேபோல் கோவில் அருகே உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சி கடையின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். மேலும் அங்கு உள்ள மேஜையை உடைத்துள்ளனர். அதில் பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்த பேப்பர்களை வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த 4-ந் தேதி திருமானூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணம் ஏதும் கிடைக்காமல் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது.

    திருச்சி:

    தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சியில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில், மதியம் திடீரென லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இரவு சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. திருச்சி மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இன்று காலை வரை தொடர்ந்து நீடித்தது.

    இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குடை பிடித்தப்படி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். தொடர்ந்து பெய்த சாரல் மழையால் ஜெயங்கொண்டம் பகுதி சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கின. கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று காலை லேசான மழை பெய்தது.

    இதற்கிடையே திருச்சியில் கடந்த சில தினங்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

    கூத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் ஏற்படும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கூத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூத்தூர் துணை மின் நிலையத்தில் (நாளை 10-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியான அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர் நமங்குணம், புதுவேட்டக்குடி, கோவில் பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கொண்டு 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கூறினார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு பணிமனையில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, 

    அரியலூர் மாவட்டம் முழுவதும் விடுப்பில் உள்ள அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் வெளியில் இருந்து உரிமம் பெற்ற ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கொண்டு 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை முறியடித்து 100 சதவிகித பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார். #tamilnews
    செந்துறை அருகே வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பரமானந்தம். இவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ராஜகுமாரி(வயது 52). இவர்களுக்கு அபர்ணா என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் செந்துறையில் இருந்து திருச்சிக்கு சென்று வர முடியாது என்பதால் தாய், மகள் இருவரும் திருச்சியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். விடுமுறை தினங்களில் மட்டும் செந்துறையில் உள்ள வீட்டிற்கு செல்வார்கள்.

    இந்நிலையில் செந்துறையில் உள்ள வீட்டில் திருட்டு போயிருப்பதாக ராஜகுமாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் செந்துறைக்கு விரைந்து சென்று வீட்டை பார்வையிட்டார்.

    மேலும் செந்துறை போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டு கதவின் பூட்டை ரம்பத்தால் அறுக்கப்பட்டு திறந்ததற்கான அடையாளங்கள் இருந்தது. பூட்டை உடைத்ததால் பொதுமக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் ரம்பத்தால் அறுத்து மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

    மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், அரை பவுன் நகை மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். போலீசாரிடம் தடயங்கள் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை வீடு முழுவதும் தூவி சென்றுள்ளனர். ராஜகுமாரி பல லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை வங்கி லாக்கரில் வைத்துள்ளார். இதனால் அவை கொள்ளையர்களிடம் இருந்து தப்பின.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×