என் மலர்
செய்திகள்

திருச்சி-அரியலூர் மாவட்டங்களில் விடிய, விடிய பெய்த சாரல் மழை
திருச்சி:
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சியில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில், மதியம் திடீரென லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இரவு சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. திருச்சி மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இன்று காலை வரை தொடர்ந்து நீடித்தது.
இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குடை பிடித்தப்படி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். தொடர்ந்து பெய்த சாரல் மழையால் ஜெயங்கொண்டம் பகுதி சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கின. கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று காலை லேசான மழை பெய்தது.
இதற்கிடையே திருச்சியில் கடந்த சில தினங்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.






