என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர்-நடுவலூர்- செந்துறை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடுவலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், சுந்தரேசபுரம், வெண்மான்கொண்டான், உல்லியக்குடி, சாத்தாம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை, மூர்த்தியான் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இதே போல் அரியலூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மற்றும் தேளூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரிய நாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர், மணக்குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன் குடிக்காடு, அயன் ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக் கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான செந்துறை, இலங்கச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தாவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், விழுப்பணங் குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்த நாயகன்குடிக்காடு, பெரிய குறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலாவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஐந்தாம் கட்டமாக இரண்டு கிராமங்கள்-உடையார் பாளையம் மற்றும் அரியலூர் வட்டங்களில் வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் 2-ந்தேதி நாளை வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடக்கிறது.

    அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, விளாங்குடி ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் முத்து சேர்வாமடம், பிளிச்சிகுழி ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம்  வட்டத்தில் காட்டாத்தூர் (வ) கிராமத்திலும், செந்துறை கிராமத்திலும் நடைபெறுகிறது. 

    முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள்,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார். #tamilnews
    திருமானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    திருமானூர்:

    தஞ்சை மாவட்டம், மேலபுனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 50). இவரது உறவினர் கண்டியூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (68). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே தாத்தமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கேண்டீன் வைத்துள்ள சாமிநாதன் மகனை பார்ப்பதற்காக சென்றனர்.

    திருமானூர் அருகே கல்லூர் பிரிவு பாதை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாமிநாதன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 

    இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமிநாதன், கோபாலகிருஷ்ணன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர். #tamilnews
    100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்களுக்கு முறையாக வேலை வழங்கப்படாததை கண்டித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    வாரியங்காவல்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதி பொதுமக்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் உத்திராபதி தலைமை தாங்கினார். 

    ஒன்றிய செயலாளர் பிச்சைபிள்ளை, ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், மாநில குழு உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் பேசினர். இதில், ஜெயங்கொண்டம், ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை.

    100 நாள் வேலை திட்டத்தினை மாற்றி 200 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குருநாதனிடம், மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஒன்றிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். #tamilnews
    பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    தாமரைக்குளம்:

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரியலூரிலும் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து ஜனவரி 24-ந் தேதி முதல் கல்லூரி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, நேற்று மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி மீண்டும் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் அரியலூரின் முக்கிய சாலைகள் வழியாக பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    கீழகுளத்தூரில் கிராமசபை கூட்டத்தை நடக்க விடாமல் தடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழகுளத்தூர் ஊராட்சியில் கடந்த 26-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் இருந்துள்ளனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த புண்ணியம் மகன் பாரதிராஜா (வயது 20) என்பவர் அங்கு வந்து ஊருக்கு எதுவும் நல்லது செய்யவில்லை. மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எதற்காக இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது எனக்கூறி தகராறு செய்துள்ளார். 

    இதுகுறித்து ஊராட்சி செயலாளர் சங்கர் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கிராமசபை கூட்டத்தை நடக்க விடாமல் தடுத்த பாரதிராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா தேசியகொடியை ஏற்றி வைத்தார்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா தேசியகொடியை ஏற்றி வைத்தார். உலக சமாதானத்தை விரும்பும் பொருட்டு வென்புறாக்களை பறக்கவிட்டார், திறந்தவெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபிரியா, மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் ஆகியோர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

    சுதந்திரப் போராட்ட தியாகிகள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 3 நபர்களுக்கு 75 ஆயிரமும், வேளாண்மை துறை மூலம் 7 நபர்களுக்கு 50 ஆயிரமும் உட்பட ரூ.1.25 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காவல் துறை, தீயனைப்புதுறை, வருவாய்துறையில் சிறப்பாக பனியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, காவல் துறையில் சிறப்பாக பனியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் லோகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், ஊராட்சி உதவி இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, இந்து சமய அற நிலையத்துறை உதவி அலுவலர் செந்தில்குமார், வேளாண்மைதுறை இணைஇயக்குனர் அய்யாசாமி, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வ ராஜ், வேளாண்மை செயல் பொறியாளர் கோமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், உதவி அலுவலர் சரவணன், சிவக்குமார், ஆர்டிஓ அரியலூர் மோகனராஜன், உடையார்பாளையம் டீனா குமாரி,

    தாசில்தார் முத்துலெட்சுமி, உமாமகேஸ்வரி, வேல்முருகன், ராஜமூர்த்தி, அரசு கேபிள்டிவி தாசில்தார் முத்துகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி, யூனியன் கமிஷ்னர் பிரபாகரன், ராஜேந்திரன், நகராட்சி கமி‌ஷனர் வினோத், மாவட்ட கூடுதல் காவல்துறை கண்கானிப்பாளர் சண்முக நாதன், டி.எஸ்.பி. மோகன்தாஸ், கென்னடி, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், அரசு தனியார் தொழிற்சாலைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் குடியரசுதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. #tamilnews
    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடந்த வினோத திருமணத்தில் பங்கேற்ற விவசாயிகள்-பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தியதோடு பெருமிதம் கொண்டனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    ஆயிரங்காலத்து பயிராக கருதப்படும் திருமணத்தை அக்னி சாட்சியாக யாகம் வளர்த்து நடத்துவது வழக்கம். அப்போது வேதமந்திரங்கள் முழங்க ஆண் தனது வாழ்க்கை துணைவிக்கு தாலி கட்டி ஏற்று கொள்வார். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களது திருமணம் ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடந்தது சற்று வினோதமாக இருந்தது. அந்த திருமணத்தில் பச்சை துண்டுகளுடன் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் அட்சதை தூவி மணமக்களுக்கு வாழ்த்து கூறினர்.

    அந்த திருமண நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:-

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் அருகே குவாகம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசன். இவருக்கும் கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகள் துர்காதேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இரு குடும்பத்தாரும் விவசாயத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்பதால் தங்களது சந்ததியினரின் திருமணத்தை ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடத்த முடிவு செய்தனர். அதன்படி அன்பரசன்-துர்காதேவி திருமணம் நேற்று முன்தினம் காலை நடந்தது. இந்த திருமணத்தில் தலைமுறை விவசாயத்தினை காப்போம் என உறுதிபூண்டு மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்.

    அப்போது பூவினால் அலங்கரிக்கப்பட்டு குங்குமம், சந்தனம் வைக்கப்பட்ட ஏர்கலப்பை அங்கு இருந்தது. அதனை மணமக்கள் அன்பரசன்-துர்காதேவி சாட்சியாக வைத்து மூன்றுமுறை சுற்றிவந்து வணங்கினர்.

    பின்னர் ஏர் கலப்பை முன் நின்று துர்காதேவி கழுத்தில் அன்பரசன் தாலி கட்டினார். இவர்களது வாழ்வில் எல்லா வளமும் பெருக வேண்டும் என்பதற்காக ஆட்டுக்குட்டி ஒன்றும் விவசாயிகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வினோத திருமணத்திற்கு அப்பகுதி பொதுமக்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர். மொத்தத்தில் இந்த திருமணம் வருங்கால சந்ததியினர் விவசாயத்தை விட்டு விலகி சென்று விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்து இருந்தது.



    இந்த திருமணம் பற்றி மணமக்கள் அன்பரசன்-துர்காதேவி கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் விவசாயம் அழிந்துகொண்டு வருகின்ற காரணத்தால் எங்களது திருமணத்தை அக்னி சாட்சி இல்லாமல் ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடத்தி முடித்தோம். ஏர்கலப்பையை வைத்துதான் நாங்கள் விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் தான் எங்கள் குடும்பம் இன்று இந்த அளவிற்கு முன்னேற்றத்துடன் உள்ளது. எங்களுக்கு பின்பும் எங்களுடைய சந்ததியினருக்கும் இதேபோன்றுதான் திருமணம் செய்து வைப்போம் என கூறினர். 

    இந்த திருமணத்திற்கு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விவசாய சங்க பிரதிநிதிகள், குவாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    அரியலூர் அருகே இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள தெத்தேரி வெள்ளாற்றில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர். இது குறித்து தளவாய் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சப்-இன் ஸ்பெக்டர்கள் சரத்குமார், ஆனந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்றில் அனுமதியின்றி 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

    பின்னர் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அனுமதியின்றி மணல் அள்ளிய ஆலத்தியூரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை, தெத்தேரியை சேர்ந்த செல்வராஜ், ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilnews
    நோட்டாவுக்கும் பா.ஜ.வுக்கும் தான் போட்டியே தவிர இவர்களுக்கும் மற்ற கட்சிக்கும் கிடையாது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயங்கொண்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தது குறித்து கேட்ட போது ஆர்.எஸ்.எஸ்.சின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறினர். அமைதி பூங்காவாக தமிழகத்தை பார்த்துக்கொள்ளும் திரவிடக்கழகத்திற்கு அனுமதி மறுத்தது ஒருதலைபட்சமானது.

    இதற்கான விலையை இந்த அரசு தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பே கொடுக்கவேண்டியது இருக்கும். ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து கருத்துக்காக எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக அவருடைய பேச்சை திரித்து மாற்றிக் கூறி அதன் மூலமாக பெரியார் மண்ணில் ஆர். எஸ்.எஸ்.ஐ. அல்லது மத வெறியை தூண்டி தாங்கள் கால் ஊன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுமா இதனால் அரசியல் லாபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா? என்று நினைக்கிறார்கள்.

    ஆன்மிக அரசியல் அடித்தளத்தை இதன் மூலமாக நிறைவேற்றலாமா? என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. என்ன முயற்சி எடுத்தாலும் நோட்டாவை விட இவர்கள் எவ்வளவு நோட்டு கொடுத்தாலும் அதிகமான இடத்தில் வெற்றி பெறமுடியாது என்பது தெரிந்துவிட்டது. நோட்டாவுக்கும் பா.ஜ.வுக்கும் தான் போட்டியே தவிர இவர்களுக்கும் மற்ற கட்சிக்கும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் ராமதாசை ஜீயர்கள் சென்று சந்தித்தது குறித்து கேட்டபோது, பெரியார் பாதைக்கு அவர் விரைவாக வந்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கும் என தெரிவித்தார்.

    ஆண்டாள் விவகாரத்தில் ரஜினி மற்றும் கமல் மவுனம் குறித்து கேட்ட போது, இது போன்ற கருத்து சொல்லக் கூடிய அளவிற்கு ஆழமான சிந்தனையும், துணிவும் அவர்களுக்கு இல்லை என்பது தான் தெளிவாக காட்டுகிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது தான் அவர்களுடைய நிலைப்பாடு.

    கூட்டத்தின் முடிவில் கி.வீரமணியின் எடைக்கு எடை நாணயங்கள், காய்கறி மூட்டை, தென்னை மரக்கன்றுகள் வழங்கினர். #Tamilnews
    தா.பழுர் அருகே வீட்டின் கதவை திறந்து 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40), சிங்கப்பூரில் தொழிலாளியாக  வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி (35).  இவர் கோரக்குடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது சகோதரியின் மகன் விபத்தில் காயமடைந்தார்.

    இதையடுத்து அவரை பார்ப்பதற்காக மகேஷ்வரி பக்கத்து ஊரான பனையடி கிராமத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு  வந்ததும் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2பவுன் நெக்லஸ், 5 பவுன் தாலி உள்ளிட்ட 17 பவுன் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருந்தது. இது குறித்து மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து இறங்கி கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    வேலைக்கு செல்ல பெற்றோர் பைக் வாங்கி தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள ஆதிக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், விவசாயி. இவரது மகன் ஞானமூர்த்தி (வயது 21), கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலைக்கு செல்லுமாறு கூறி அறிவுறுத்தியுள்ளனர். தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அவரது பெற்றோர் குடும்ப வறுமையை கூறி பைக் வாங்கி கொடுக்க மறுத்து வந்துள்ளனர்.

    இது தொடர்பாக நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஞானமூர்த்தி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து செந்துறை போலீஸ் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews
    ×