என் மலர்
செய்திகள்

ஆர்.எஸ்.மாத்தூர் அருகே ஏர் கலப்பையை சாட்சியாக வைத்து நடந்த வினோத திருமணம்
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடந்த வினோத திருமணத்தில் பங்கேற்ற விவசாயிகள்-பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தியதோடு பெருமிதம் கொண்டனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
ஆயிரங்காலத்து பயிராக கருதப்படும் திருமணத்தை அக்னி சாட்சியாக யாகம் வளர்த்து நடத்துவது வழக்கம். அப்போது வேதமந்திரங்கள் முழங்க ஆண் தனது வாழ்க்கை துணைவிக்கு தாலி கட்டி ஏற்று கொள்வார். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களது திருமணம் ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடந்தது சற்று வினோதமாக இருந்தது. அந்த திருமணத்தில் பச்சை துண்டுகளுடன் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் அட்சதை தூவி மணமக்களுக்கு வாழ்த்து கூறினர்.
அந்த திருமண நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:-
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் அருகே குவாகம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசன். இவருக்கும் கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகள் துர்காதேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இரு குடும்பத்தாரும் விவசாயத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்பதால் தங்களது சந்ததியினரின் திருமணத்தை ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடத்த முடிவு செய்தனர். அதன்படி அன்பரசன்-துர்காதேவி திருமணம் நேற்று முன்தினம் காலை நடந்தது. இந்த திருமணத்தில் தலைமுறை விவசாயத்தினை காப்போம் என உறுதிபூண்டு மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்.
அப்போது பூவினால் அலங்கரிக்கப்பட்டு குங்குமம், சந்தனம் வைக்கப்பட்ட ஏர்கலப்பை அங்கு இருந்தது. அதனை மணமக்கள் அன்பரசன்-துர்காதேவி சாட்சியாக வைத்து மூன்றுமுறை சுற்றிவந்து வணங்கினர்.
பின்னர் ஏர் கலப்பை முன் நின்று துர்காதேவி கழுத்தில் அன்பரசன் தாலி கட்டினார். இவர்களது வாழ்வில் எல்லா வளமும் பெருக வேண்டும் என்பதற்காக ஆட்டுக்குட்டி ஒன்றும் விவசாயிகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வினோத திருமணத்திற்கு அப்பகுதி பொதுமக்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர். மொத்தத்தில் இந்த திருமணம் வருங்கால சந்ததியினர் விவசாயத்தை விட்டு விலகி சென்று விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்து இருந்தது.

இந்த திருமணம் பற்றி மணமக்கள் அன்பரசன்-துர்காதேவி கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் விவசாயம் அழிந்துகொண்டு வருகின்ற காரணத்தால் எங்களது திருமணத்தை அக்னி சாட்சி இல்லாமல் ஏர்கலப்பையை சாட்சியாக வைத்து நடத்தி முடித்தோம். ஏர்கலப்பையை வைத்துதான் நாங்கள் விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் தான் எங்கள் குடும்பம் இன்று இந்த அளவிற்கு முன்னேற்றத்துடன் உள்ளது. எங்களுக்கு பின்பும் எங்களுடைய சந்ததியினருக்கும் இதேபோன்றுதான் திருமணம் செய்து வைப்போம் என கூறினர்.
இந்த திருமணத்திற்கு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விவசாய சங்க பிரதிநிதிகள், குவாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Next Story






