search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் கருணாநிதி
    X
    கலைஞர் கருணாநிதி

    தமிழர்களின் இதயங்களில் குடிகொண்ட கலைஞர்

    1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர், தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்தார்.

    “ஓய்வறியா சூரியன்” என்ற பெயருக்கு ஏற்ப ஓயாத உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த கலைஞர், அரசியல் மட்டுமின்றி, எழுத்து, பேச்சு, சினிமா, இலக்கியம் என பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டவர். 

    ஆளுமையாக இருக்கட்டும், ஜனநாயகப் பண்பாக இருக்கட்டும், உரிமைக் குரலாக இருக்கட்டும், கொள்கைப் பிடிப்பாக இருக்கட்டும் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். டெல்லியை தமிழகம் உற்றுநோக்கிய காலத்தை மாற்றி, டெல்லியே தமிழகத்தை உற்றுப்பார்க்கும் அளவுக்கு நிலைமையை மாற்றிய தலைவர் கலைஞர். 

    தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளியான அவரது பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 

    கலைஞர் படத்திற்கு மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்

    நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன்3-ம் தேதி முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் கருணாநிதி. பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 

    நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது வயதில், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 

    அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக கல்லக்குடி போராட்டம் அமைந்தது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் கல்லக்குடி ரெயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர். அதன்பின்னர் தீவிரமாக இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். தனது அயராத உழைப்பு மற்றும் தீர்க்கமான முடிவுகளால் கட்சியை வளர்த்ததுடன், தானும் வளர்ந்தார். 

    திமுக முதன்முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில், குளித்தலை தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டார். மிகப்பெரிய தொகுதியான குளித்தலையில், கடும் சவால்களுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தை 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் கருணாநிதி. அதன்பின்னர் அவர் போட்டியிட்ட 12 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தோல்வியையே சந்திக்காத தலைவர் என்ற பெருமையை பெற்றார். 

    1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர், தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை அலங்கரித்தார். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். 

    கலைஞர் கருணாநிதி

    அவரது பதவிக்காலத்தில், மாநிலத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். இன்றளவும் பெருமையாக கூறக்கூடிய, இன்றைய தேதியிலும் மற்ற மாநிலங்கள் கொண்டு வராத பல முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை அவர் தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தினார். 

    இடையறாத அரசியல் பணிகளுக்கு மத்தியிலும், எழுத்துப் பணியை தொடர்ந்தவர் கருணாநிதி. 10 நாவல்கள், 24 நாடகங்கள், 4 வரலாற்று புனைவுகள், 9 கவிதை நூல்கள், 39 சிறுகதைகள், தன் வரலாறு என்று ஏராளமாக எழுதினார். இதுதவிர தொண்டர்களுக்கு ‘உடன்பிறப்பே’ என்ற தலைப்பில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதி உள்ளார். 75 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

    புராணங்கள், இலக்கியங்கள் என பழங்கால கதைகளையே மீண்டும் மீண்டும் படமாக எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், பல்வேறு சமூக கருத்துகள் கொண்ட படங்களை வழங்கி, சினிமா மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் கலைஞர் மு.கருணாநிதி. அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான படங்களில் திராவிடக் கொள்கைகள் பிரதிபலிக்கும். 

    முதன்முதலில் சினிமாவில் திரைக்கதை எழுதிய படம் ராஜகுமாரி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமூக பிரச்சனைகள் மற்றும் மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டும் வகையில் அவரின் ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. பராசக்தி, மனோகரா, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களில் கருணாநிதியின் வசனங்கள் இன்றும் தமிழர்களின் இதயங்களில் கர்ஜிக்கிறது.

    2009-ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) மாநாட்டில் உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது  கலைஞருக்கு வழங்கப்பட்டது. 

    1970-ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010-ஆம் ஆண்டு,  ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரப்பூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார். 

    தமிழர்களின் இதயங்களில் குடிகொண்ட ஓய்வறியா சூரியன், 2018 ஆகஸ்ட் 7ம் தேதி உறங்கச் சென்றது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

    Next Story
    ×