search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனம் செயல்பட்ட காட்சி.
    X
    2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனம் செயல்பட்ட காட்சி.

    திருப்பூரில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கிய பனியன் நிறுவனங்கள்

    நூல் விலை மற்றும் பல்வேறு மூலப்பொருட்கள் விலையை கருத்தில் கொண்டு ஆடை தயாரிப்பாளர்கள் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் திருப்பூரில் இருந்து தினமும் பல கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். 
    மேல் ஆடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. 

    நூல் விலை மற்றும் பல்வேறு மூலப்பொருட்கள் விலையை கருத்தில் கொண்டு ஆடை தயாரிப்பாளர்கள் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

    இது போல் நூல் விலையையும் அதிக அளவு நூற்பாலைகள் உயர்த்தி வருகின்றன. இதனால் நூல் விலையை குறைக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், டீமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நூல் விலையை குறைக்க வேண்டும் என நூற்பாலைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி வந்தன. 

    மேலும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை குறித்த அறிவிப்பை நூற்பாலைகள் கடந்த 1ம் தேதி வெளியிட்டன. அதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.40 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனால் திருப்பூர் தொழில் துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், நூல் விலை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் பனியன் நிறுவனங்களில் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக ஒரு மனதாக முடிவு செய்தனர். 

    அதன்படி கடந்த 2 நாட்கள் திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதுபோல் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். 

    திருப்பூரில் கடந்த 2 நாட்களில் பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.720 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது என தொழில் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று (புதன்கிழமை) மீண்டும் பனியன் நிறுவனங்கள் வழக்கம்போல் வேலையை தொடங்கின. தொழிலாளர்களும் நிறுவனங்களுக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றனர்.
    Next Story
    ×