search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருத்தரங்கில் மாணவிக்கு டி.எஸ்.பி. வெங்கடேசன் சான்றிதழ் வழங்கிய போது எடுத்தபடம்.
    X
    கருத்தரங்கில் மாணவிக்கு டி.எஸ்.பி. வெங்கடேசன் சான்றிதழ் வழங்கிய போது எடுத்தபடம்.

    மாணவர்களின் நேரத்தை வீணடிப்பது சமூக ஊடகங்கள் தான்-டி.எஸ்.பி. வெங்கடேசன் பேச்சு

    குரும்பூரில் நடைபெற்ற முதன்மை திட்ட கருத்தரங்கில் டி.எஸ்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மாணவர்களின் நேரத்தை வீணடிப்பது சமூக ஊடகங்கள் தான் என அவர் கூறினார்.
    குரும்பூர்:

    இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் அமைச்சகம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை, அங்கமங்கலம் பஞ்சாயத்து மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் குரும்பூரில் எஸ்.சி., எஸ்.டி., பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான முதன்மை திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

     அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மதர் டிரஸ்ட் இயக்குனர் கென்னடி வரவேற்றார். தனி தாசில்தார் லெனின், மதர் டிரஸ்ட் தலைவர் சதிஷ்பாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் பேசுகையில், நாம் நவீன உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

    இந்த நவீன உலகில் மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துபவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். 

    மாணவர்களுடைய 75 சதவீத நேரத்தை வீணடிப்பது செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள்தான். இதுபோன்ற சமூக ஊடகங்களுக்கு மாணவர்கள் அடியாகி உள்ளனர். 

    நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் வெற்றி பெறுவதற்கு அதிக நேரம் தேவை. அந்த நேரத்தை நல்லதிற்காக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். 

    ஆனால் நமது மாணவர்கள் இப்போது சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பதால் பலர் தோல்வியை சந்திக்கின்றனர். எனவே மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பதை தவிர்க்க வேண்டும். 

    இளைய சமுதாயமான நீங்கள் போட்டி தேர்வுகளை சந்திக்க வேண்டும். இந்த போட்டி தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    இதனைத்தொடர்ந்து அங்கமங்கலம் பஞ்சாயத்து வளாகத்தில் டி.எஸ்.பி. வெங்கடேசன் மரக்கன்று நட்டி கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கினார். 

    Next Story
    ×