search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஏர்வாடி பகுதியில் வாழைக்காய் விலை குறைப்பு செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டருக்கு கோரிக்கை

    ஏர்வாடி பகுதியில் வாழைக்காய் விலை குறைப்பு செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஏர்வாடி:

    ஏர்வாடி, திருக்குறுங்குடி, வள்ளியூர், களக்காடு பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக நேந்திரன் என்ற ஏத்தன் வகை வாழை பயிரிடப்பட்டு வருகிறது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்யப்பட்டு வரும் இவ்வகையான வாழைக்காய் ஒட்டு மொத்தமாக கேரளா சந்தையில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

     இவ்வகையான வாழைக்காய்களை உற்பத்தி செய்ய வாழை ஒன்றுக்கு ரூ.150 முதல் 180 வரை செலவினமாகிறது. இதில் சில விவசாயிகள் நிலங்களை குத்தகைக்கு வாங்கி பயிரிடும்போது செலவினம் பலமடங்கு அதிகரித்து விடுகிறது.

    வேலை ஆட்களின் கூலி கணிசமாக உயர்ந்து விட்டதால் மென்மேலும் செலவு அதிகரித்து விடுகிறது. வாழைக்காயை அறுவடை செய்ய 1 வருடம் ஆகிவிடுகிறது. இந்நிலையில் வாழைகன்று நடவு செய்த நிலையிலிருந்து அறுவடை செய்யும் வரை ஒரு சில ஏழை விவசாயிகள் பயிர் செலவினங்களுக்காக வாழைக்காய் வியாபாரிகளிடம் சிறிது சிறிதாக பணம் கடன் வாங்கி பருவம் செய்து வருகின்றனர்.

    அறுவடை சமயத்தில் கடன் கொடுத்த வாழைக்காய் வியாபாரிகள் வட்டியும் முதலுமாக விவசாயிகளிடம் விலை குறைப்பு செய்து அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். அத்துடன் இந்த வியாபாரிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு மிக குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.


    உதாரணமாக கேரளா சந்தையில் 1 கிலோ வாழைக்காய் விலை தற்போது ரூ.55 முதல் 60 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதி வியாபாரிகள் தற்போது ரூ.25 முதல் 28 வரை விலை குறைப்பு செய்து வருகின்றனர். அத்துடன் வாழைக்காய் இடைத்தரகர்கள் வேண்டுமென்றே தற்காலிக விலை வீழ்ச்சி செய்து வருகின்றனர். இவ்வகையான இடைத்தரகர்கள் 10 டன் கொண்ட ஒரு லாரி வாழைக்காய்களை 10 பேரிடம் கைமாற்றி அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.

    பல்வேறு நிலைகளில் மதிப்பு கூட்டல் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நேந்திரன் வகை வாழைக்காய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதித்து வருவது வேதனையானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    எனவே தமிழக அரசு உடனடியாக குளிர்சாதன கிடங்கை அமைப்பதுடன் வாழைக்காய்களுக்கு அரசின் சார்பில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் தாசில்தார் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    Next Story
    ×