search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் நின்றபடி பயணித்த மு.க.ஸ்டாலின்
    X
    பஸ்சில் நின்றபடி பயணித்த மு.க.ஸ்டாலின்

    சென்னையில் திடீரென்று மாநகர பஸ்சில் பயணித்த மு.க.ஸ்டாலின்

    பஸ்சில் இலவச பயணம் பயனுள்ளதாக இருக்கிறதா என்று பெண் பயணிகளிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் கேட்டறிந்தார்.
    சென்னை:

    தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இன்று காலையில் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துவதற்காக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒயிட்போர்டு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. ஒயிட்போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பது தி.மு.க.வின் சாதனைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே அந்த பஸ்சை பார்த்ததும் எல்லோ பேஜஸ் அருகே காரை நிறுத்த சொல்லி பஸ்சில் ஏறினார். முதலமைச்சர் பஸ்சில் ஏறியதை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

    பலரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். மேல் கம்பியை பிடித்தபடி நின்று கொண்டே பஸ்சில் பயணம் செய்தார்.

    இன்று மு.க.ஸ்டாலின் பயணம் செய்தது 29 சி டவுன் பஸ். இதே பஸ்சில்தான் அவர் தனது இளமை பருவத்தில் பள்ளிக்கும் சென்றுள்ளார். இன்று முதல்வராக அதே பஸ்சில் பயணம் செய்ததை குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

    பஸ்சில் பயணம் செய்த முக ஸ்டாலின்

    பஸ்சில் இலவச பயணம் பயனுள்ளதாக இருக்கிறதா என்று பெண் பயணிகளிடம் கேட்டார். அவர்கள் மகிழ்ச்சி பொங்க ஆமாம் என்றனர்.

    வேறு ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பயணிகள் தரப்பில் ஒயிட்போர்ட்டு பஸ் அதிகமாக வருவதில்லை. கூடுதலாக இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    அதை கேட்டதும், நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று சிட்டி சென்டர் அருகே பஸ்சை விட்டு இறங்கினார்.

    பின்னர் அங்கிருந்து காரில் தனது பயணத்தை தொடர்ந்தார். பயணிகள் அவருக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் பஸ்சில் பயணித்ததால் அந்த பஸ்சில் பயணித்த பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

    பயணிகள் கூறும் போது, ‘முதலமைச்சர் நினைத்தால் அதிகாரிகளிடமே எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அவரே நேரடியாக வந்து பயணிகள் அனுபவத்தை கேட்டது மறக்க முடியாத அனுபவம்” என்றனர்.

    Next Story
    ×