search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகிச்சை பெற்று வரும் மாணவி நாக நாராயணி
    X
    சிகிச்சை பெற்று வரும் மாணவி நாக நாராயணி

    பாளை சாந்தி நகரில் பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்

    பாளை சாந்தி நகரில் பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நெல்லை:

    பாளை சாந்தி நகரை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன். இவர் சமையல் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மகள் நாக நாராயணி (வயது20). இவர் பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக தினமும் அவர் அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நாக நாராயணி வழக்கம் போல் இன்று காலை சாந்தி நகரில் இருந்து சந்திப்புக்கு ஒரு அரசு பஸ்சில் சென்றார். அப்போது அந்த பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக வேறு வழியின்றி படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தார். மணிக்கூண்டு பகுதியில் பஸ் வந்த போது நிலை தடுமாறிய நாக நாராயணி எதிர்பாராத விதமாக பஸ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் காயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது தொடர்பாக சாந்தி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, பள்ளி, அலுவலக நேரமான 8 மணி முதல் 9 மணி வரை 4 அரசு பஸ்கள் மட்டுமே எங்கள் ஊர் வழியாக சென்று வருகிறது. அந்த பேருந்துகள் அருகில் உள்ள சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படுவதால் அந்த ஊர்களிலேயே கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இதனால் சாந்தி நகர் வரும் போது பேருந்தில் இடம் இல்லாமல் உள்ளது. எனினும் பள்ளி, அலுவலகங்கள் செல்ல குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிக்க வேண்டும் என்ற காரணத்தினால் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் மாணவ- மாணவிகள் பயணித்து வருகிறார்கள்.

    இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×