search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்
    X
    அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்

    திருப்பூர் மாவட்டத்தில் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை பொதுமக்கள்- மாணவர்கள் அவதி

    தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று மொத்தம் 60 பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் இன்று காலை வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மாநகரில் 2 மற்றும்  காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை  உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளது. இங்கிருந்து தினமும் 546 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று மொத்தம் 60 பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் இன்று காலை வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்தனர். வேலைநிறுத்தம் காரணமாக பணிமனைகளில் பஸ்கள் அனைத்தும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    மேலும் பணிமனைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அ.தி.மு.க., தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோக்கள் இயங்கவில்லை.

    பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து  பனியன் தொழிலாளர்கள் கூறுகை யில்,  இன்று பஸ்கள் அனைத்தும் இயங்கும் என்று நினைத்தோம். ஆனால் காலையில்  பஸ் நிலையத்திற்கு சென்ற போது   பஸ்கள் இயங்காததால் மிகவும் பாதிக்கப்பட்டோம்.

    தனியார் பஸ்கள் இயங்கினாலும் அதில் அனைவரும் போட்டி போட்டு ஏறினர். இதனால் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை  ஏற்பட்டது. இந்த நிலையால் காலதாமதமாக பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்றனர்.

    பள்ளி மாணவர்கள் கூறுகையில், பஸ்கள் இயக்கப்படாததால் பெற்றோர்கள் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றனர். சில மாணவர்கள் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர் என்றனர்.

    வார விடுமுறை முடிந்து இன்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் பலர் வேலை மற்றும் பல்வேறு பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்ல இன்று காலை பஸ் நிலையங்களில் குவிந்தனர். இதனால் உடுமலை, தாராபுரம், காங்கயம்,  பல்லடம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததை படத்தில் காணலாம்.

    திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், தற்காலிக  பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் பஸ்கள் ஓடுமா,ஓடாதா என்று தெரியாததால் அவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
    Next Story
    ×