search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடும் வெயில் காரணமாக தண்ணீரின்றி வறண்டு காணப்படும் குற்றாலம் மெயின் அருவி.
    X
    கடும் வெயில் காரணமாக தண்ணீரின்றி வறண்டு காணப்படும் குற்றாலம் மெயின் அருவி.

    கோடையை மிஞ்சும் கடும்வெயில்- குற்றாலத்தின் அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டது

    மலைப்பகுதியில் மழை நின்றதுடன் கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் கடும் வெயில் வாட்டி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவது தென்காசி மாவட்டம் குற்றாலம். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன்களைகட்டி காணப்படும்.

    இந்தக்காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல்மழை பெய்து கொண்டே இருக்கும். அப்போது அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    சீசன் காலங்களில் குற்றாலத்தில் காணப்படும் குளுகுளு சீசனை காணவும், அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவார்கள்.

    வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் சீசன் முடிந்த பிறகு அருவிகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து விடும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். அப்போது சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சபரிமலைக்கு செல்வார்கள்.

    இந்தாண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பின்னரும் குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்து வந்தது.

    இந்நிலையில் மலைப்பகுதியில் மழை நின்றதுடன் கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. தற்போது பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் குற்றாலம் வரும் சுற்றுலாப்பயணிகள் அருவிகளை தண்ணீர் இல்லாததை பார்த்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் சிலர் அருவிக்கரையில் நின்று செல்பி எடுத்து செல்வதை பார்க்கமுடிகிறது.

    Next Story
    ×