search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய வாகனங்கள் - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

    கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தினை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய வாகனங்கள் வாங்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல் தங்கள் விளைபொருள்களை இடைதரகர்களின்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உழவர்சந்தை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள், பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடுதோறும் வழங்கிட ஏதுவாக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தினை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் விண்ணப்பிக்க பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும், 21 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட விவசாயியாகவும் இருக்க வேண்டும். மேலும் சொந்த அல்லது குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடமை சான்று, சிட்டா, அடங்கல், ஆதார்அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் ஒரு பயனாளிகளுக்கு ஒரு வாகனத்துக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய விவசாயிகள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவர்சந்தை அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று மார்ச் 10-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) 98656-78453 என்றசெல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×