search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்என் ரவி
    X
    தமிழக கவர்னர் ஆர்என் ரவி

    நீட் விலக்கு மசோதா மீது கவர்னர் அடுத்து என்ன முடிவு எடுப்பார்?: கடமையை செய்வாரா? காலம் தாழ்த்துவாரா?

    தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக கவர்னர் திருப்பி அனுப்பிய சட்டமசோதா பெரிய அளவில் திருத்தங்கள் எதுவும் செய்யப்படாமல் மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மருத்துவ இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக கிராமப் பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் 142 நாட்களுக்கு பிறகு கவர்னர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து நேற்று தமிழக சட்டசபை சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக கவர்னர் திருப்பி அனுப்பிய சட்டமசோதா பெரிய அளவில் திருத்தங்கள் எதுவும் செய்யப்படாமல் மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு நீட் விலக்கு மசோதா மீண்டும் கவர்னர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து நீட் விலக்கு மசோதாவில் அடுத்து கவர்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்வார்? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இனி அவர் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்ப முடியாது.

    அதே சமயத்தில் நீண்ட நாட்களுக்கு அவரால் அதை நிலுவையில் வைத்து இருக்கவும் முடியாது. இந்தநிலையில் கவர்னர் ரவி காலம் தாழ்த்துவாரா? அல்லது உரிய கடமையை செய்வாரா? என்பதுதான் முக்கிய கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     

    நீட் தேர்வு

     

    பொதுவாக சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவது வழக்கம். தேவைப்பட்டால் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி பிறகு ஒப்புதல் கொடுப்பார்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் தேவைப்படும் பட்சத்தில் மாநில சட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைப்பார். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201-ன்கீழ் ஜனாதிபதி அந்த சட்டமசோதாவை ஆதரிப்பார், அல்லது திருப்பி அனுப்புவார். அல்லது முடிவு எடுக்காமல் நிலுவையில் வைத்து இருப்பார்.

    ஆனால் கவர்னர் தனக்கு வரும் சட்ட மசோதாவை எந்த காலகட்டத்துக்குள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் குறிப்பிடப் படவில்லை. கவர்னர் விரும்பும்வரை அதை தனது பரிசீலனையில் வைத்து இருக்க முடியும்.

    தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் 4 மாதங்கள் வரை நிலுவையில் வைத்திருந்தார். கடந்த 1-ந் தேதிதான் திருப்பி அனுப்பினார்.

    இந்த வி‌ஷயத்தில் கவர்னரின் முடிவில் கோர்ட்டு கூட தலையிட இயலாது. அதற்கேற்ப அரசியலமைப்பின் 361-வது சட்டப்பிரிவு கவர்னருக்கு பல்வேறு அதிகாரங்களை கொடுத்துள்ளது.

    இதேபோன்றுதான் ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் உள்ளது. ஜனாதிபதி எந்தவொரு மசோதாவிலும் உடனடியாக தனது முடிவை எடுக்க வேண்டும் என்று அவரை யாராலும் வலியுறுத்த முடியாது. எனவே ஜனாதிபதி அலுவலகத்திலும் சட்டமசோதா நீண்ட நாட்கள் நிலுவையில் இருக்க வாய்ப்புள்ளது.

    இந்தநிலையில் கவர்னர் நேரடியாக சட்டமசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பமாட்டார். மத்திய உள்துறையில் உள்ள அதற்குரிய பிரிவுக்கு தான் நீட் விலக்கு மசோதா பரிந்துரை செய்யப்படும். மத்திய உள்துறை அதிகாரிகள் அதை ஆய்வு செய்துவிட்டு பிறகு ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைப்பார்கள். எனவே இந்த வி‌ஷயத்தில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி என்ன முடிவு எடுப்பார்கள்? எப்போது முடிவு எடுப்பார்கள்? என்பதெல்லாம் சட்ட வரையறைக்கு உட்படாமல் இருப்பதால் கேள்விக்குறி நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    என்றாலும் இதற்கு முன்பு மணிப்பூர் மாநில சட்டசபை விவகாரத்திலும் சர்க்காரியா கமி‌ஷன் விவகாரத்திலும் கோர்ட்டு காலவரையறையை நிர்ணயம் செய்வதாக தெரிவித்தது. அதன் அடிப்படையில் நீட் விலக்கு மசோதாவுக்கும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு செய்ய முடியும் என்று தி.மு.க. மேல்சபை எம்.பி. வில்சன் கூறி உள்ளார்.

    ஆனால் தமிழக முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் இதில் இருந்து மாறுபடுகிறார். இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக வெற்றி பெறுவது என்பது கடினமானது என்று கூறுகிறார்.

    முன்னாள் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ‘‘அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நீட் தேர்வில் உடனடி வெற்றி கிடைக்கும் என்பதை எதிர்பார்க்க இயலாது. எனவே தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்டு நீட் தேர்வுக்கு 3 அல்லது 5 ஆண்டுகள் போன்று விலக்கு பெறுவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்றார்.

    சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்புவதை தவிர வேறு வழி இல்லை என்பது உறுதியாகிஉள்ளது. ஆனால் கவர்னர் ரவி இந்த வி‌ஷயத்தில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிப்பதாக தெரிகிறது.

    இப்படி சொல்லி அவர் காலம் தாழ்த்த நினைக்கலாம். என்றாலும் நீண்ட நாட்களுக்கு அவர் நீட் விலக்கு மசோதாவை வைத்துக் கொண்டு இருக்க இயலாது. ஜனாதிபதிக்கு அவர் பரிந்துரை செய்தே தீர வேண்டும்.

    ஜனாதிபதி இந்த விவகாரத்தில் எப்போது நடவடிக்கை எடுப்பார் என்பது பொறுத்துதான் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும். ஜனாதிபதி அலுவலகத்தில் எதிர்பார்த்த பதில் கிடைக்காத பட்சத்தில் அல்லது ஜனாதிபதி தாமதம் செய்யும் பட்சத்திலும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடுவது தவிர வேறு வழி இல்லை.

    எனவே மீண்டும் நீட் விலக்கு மசோதா விவகாரம் சட்டப்பூர்வமான தீர்வை நோக்கி செல்லும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    இதையும் படியுங்கள்... கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது: கமல் ஹாசன்

    Next Story
    ×