search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட காட்சி.
    X
    பாளை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

    நெல்லையில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணி தீவிரம்

    தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் நெல்லையில் பள்ளிகளை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    நெல்லை:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் தொடர்ந்து செயல் பட முடியாத நிலையில் இருக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன.

    கொரோனா மூன்றாவது அலை, ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளி நடக்கவில்லை.

    அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் 10-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நேரடியாக நடந்து வந்தது.

    கடந்த பொங்கல் விடுமுறையை தொடர்ந்து இந்த மாதம் 31-ந்தேதி வரை அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடிய அளவுக்கு பாதிப்போ, உயிரிழப்போ பெரிய அளவில் இல்லை.

    இதன் காரணமாக வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

    இரவு நேர ஊரடங்கையும் நீக்கி தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்களிலும் வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பள்ளி களையும் திறக்கவேண்டும் என்று பெற்றோர்களும், தனியார் பள்ளி ஆசிரியர் களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. இதனை யொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து, வகுப்பறையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் நேற்று முதலே தொடங்கிவிட்டது.

    மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பள்ளிகளுக்கு வரும் அனைத்து மாணவ-மாணவிகளும் முககவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக கூடுதல் வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.  சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என்றும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட் டுள்ளனர்.

    அதற்கான ஏற்பாடுகளையும் பள்ளி தலைமையாசிரியர்கள் செய்து வருகின்றனர்.


    Next Story
    ×