search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரிசர்வ் வங்கி ஊழியர்கள்
    X
    ரிசர்வ் வங்கி ஊழியர்கள்

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்

    தமிழக அரசாணையை அவமதித்ததற்காக அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. 

    இது தொடர்பாக கேட்டதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்தனர். 

    இந்நிலையில் தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழக அரசாணையை அவமதித்ததற்காக அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை போலீசாரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வீடியோ ஆதாரங்களை திரட்டி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×