search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பேருந்துகள்
    X
    அரசு பேருந்துகள்

    பொங்கல் பண்டிகைக்கு பஸ்களில் சொந்த ஊர் செல்ல 60 ஆயிரம் பேர் முன்பதிவு

    பொங்கல் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நாட்களில் தொற்றின் பாதிப்பை பொறுத்து பஸ்கள் இயக்குவது குறித்த முடிவை அரசு மேற்கொள்ளும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பஸ்களில் முன்பதிவு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கியது.

    ஒரு மாதத்துக்கு முன்பே அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது. வெளியூர் செல்லக்கூடியவர்கள் வருகிற 11, 12, 13 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ள வசதியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு நடந்து வருகிறது.

    இந்த 3 நாட்களில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சுமார் 1,200 பஸ்களில் பயணம் செய்ய இந்த முன்பதிவு நடந்திருப்பதாக போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்ல 35 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்களுக்கு இந்த முன்பதிவு நடைபெற்று வருகிறது. முதலில் அரசு விரைவு பஸ்களுக்கும், அதனைத் தொடர்ந்து மற்ற போக்குவரத்துக்கழக பஸ்களுக்கும் நடைபெறும்.

    தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. பொதுமக்கள் பயணம் செய்ய தயங்குகிறார்கள். இப்போதே பெரும்பாலான பஸ்கள் காலியாக ஓடுகின்றன. இன்னும் பொங்கலுக்கு ஒரு வாரம் உள்ளது. தொற்று பரவலை பொறுத்துதான் பொதுமக்கள் பயணத்தை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நாட்களில் தொற்றின் பாதிப்பை பொறுத்து பஸ்கள் இயக்குவது குறித்த முடிவை அரசு மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×