search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நியாயம் கேட்டு கொடைக்கானல் மலை கிராமங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டம்
    X
    நியாயம் கேட்டு கொடைக்கானல் மலை கிராமங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டம்

    சிறுமி மர்ம மரணம்: மலை கிராமங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டம் - அதிகாரிகளின் காலில் விழுந்து கதறல்

    பாச்சலூர் பள்ளி மாணவி மர்மச்சாவு குறித்து குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க கோரி பல்வேறு கிராமங்களில் போராட்டம் வெடித்து வருகிறது.
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பாச்சலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியராஜ் என்பவரது மகள் பிரித்திகா (வயது 9). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி அங்குள்ள சமையலறையின் பின்பு உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தார்.

    அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை யாரேனும் எரித்து கொலை செய்திருக்கலாம் என்றும் உறவினர்கள் புகார் தெரிவித்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் கொடைக்கானல் ஆர்.டி.ஒ. முருகேசன், டி.எஸ்.பி. சீனிவாசன் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கையில், மாணவி உடல் எரிந்த நிலையில் இறந்துள்ளார். அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை. மாணவியின் தலை முடி மற்றும் உடல் உறுப்புகளின் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவு வந்த பிறகு முழுமையான விபரங்கள் தெரிய வரும். இதுவரை பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    இந்நிலையில் பாச்சலூர் சிறுமி இறப்பில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி மலை கிராமத்தில் மேலும் சிலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேல் மலை கிராமமான மன்னவனூரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் அங்கு சுமார்2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுமி இறப்பு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நீதி வேண்டி போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே பாச்சலூர் பள்ளி 1 வாரமாக திறக்கப்படாத நிலையில் மேலும் சில கிராம மக்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மலை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் பாச்சலூர் நடுநிலைப்பள்ளியில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சிறுமி இறப்பு குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதால் இந்த பிரச்சினையில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதனால் மற்ற குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன் வர வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது அங்கிருந்த பிரித்திகாவின் உறவினர்கள் அதிகாரிகளின் காலில் விழுந்து தங்கள் குழந்தை இறப்புக்கு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கதறினர். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×