search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதி மய்யம்
    X
    மக்கள் நீதி மய்யம்

    மாணவர்களுக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும்- தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

    பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அவர்களுக்கெனத் தனியாக ‘மாணவர் சிறப்பு பஸ்’ இயக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ‌ஷம்ஷேர் கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கிக்கொண்டே ஆபத்தான முறையில் பயணிப்பது தொடர்கதையாகி விட்டது.

    கொரோனா காலம் முடிந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதிலிருந்து ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கலாம்’ என அறிவிக்கப்பட்டது.

    பள்ளி மாணவர்கள்

    ஆனால், சென்னை மாநகரில் சாதாரணக் கட்டணம், விரைவுப்பேருந்து, சொகுசுப்பேருந்து என மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் பேருந்தில் மட்டுமே மாணவர்கள் இலவசமாகப் பயணம் செய்ய இயலும்.

    காலை நேரத்தில் பணிக்குச் செல்வோரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால், கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கொரோனா இரண்டாம் அலை முடிந்து மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகள் வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அவர்களுக்கெனத் தனியாக ‘மாணவர் சிறப்பு பஸ்’ இயக்கப்பட வேண்டும்.

    மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக தனிப்பேருந்து’ இயக்கப்படுவதை அரசு விரைவாகப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×