search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர் சேதம் குறித்து முக ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர்கள் குழு
    X
    பயிர் சேதம் குறித்து முக ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர்கள் குழு

    டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்து அமைச்சர் குழு ஆய்வு- மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்

    அமைச்சர்கள் குழு நடத்திய ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளை நிலங்களில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 2 முறை ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் தமிழ்நாடு முழுவதும் வெள்ளக்காடானது. கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    டெல்டா மாவட்டங்களிலும் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

    இது தொடர்பாக ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    அமைத்தார்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர்.

    இந்த 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் கடந்த 12-ந்தேதி தஞ்சாவூர் சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

    மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

    மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் எவ்வளவு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்தது? அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்ற விவரங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர்.

    அதன் பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி சேத விவரங்களை கேட்டனர். பின்னர் அவர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்களை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

    நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டது.

    இதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் வெள்ள சேதத்தை பார்வையிட்டார்.

    அமைச்சர்கள் குழு நடத்திய ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    ஆய்வுக்கு பிறகு அமைச்சர்கள் குழுவினர் கடந்த 2 நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சேத மதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்தது.

    இதற்கிடையே கன்னியாகுமரி பகுதியில் சேத விவரங்களை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை திரும்பினார்.

    இதையடுத்து இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்த அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தனர்.

    அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் இந்த குழுவினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்னென்ன வழிகளில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த அறிக்கையில் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு கடிதம் எழுத உள்ளார்.

    பயிர் சேதம் மட்டுமின்றி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு விவரங்களை குறிப்பிட்டும் நிவாரணம் கேட்க முடிவு செய்துள்ளார்.


    Next Story
    ×