search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் (28-ந்தேதி) தொடங்கியது.

    முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், இன்று (30-ந்தேதி) குருபூஜை விழாவாகவும் நடத்தப்படுகிறது.

    குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் திரளானோர் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் மதுரை வந்தார்.

    பின்னர் கீழடி தொல்லியல் அகழாய்வு பணிகள், மதுரை நகரில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    இரவு அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.15 மணிக்கு குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

    முதலில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு முதல்- அமைச்சர் அண்ணாநகர் 80 அடி ரோடு வழியாக சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மு.க.ஸ்டாலினை வரவேற்று கோ‌ஷம் எழுப்பினர். இதனை பார்த்த அவர் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

    தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து அவர் பசும்பொன்னிற்கு புறப்பட்டு சென்றார். வழி நெடுகிலும் தி.மு.க.வினரும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட எல்லையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் காலை 9.30 மணிக்கு பசும்பொன் சென்றார்.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை


    அங்கு நடந்த குருபூஜை விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், தி.மு.க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். பிற்பகல் அவர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    குருபூஜை விழாவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனால் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து பா.ஜனதா, காங்கிரஸ், ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., அ.ம.மு.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், த.மா.கா., மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், பகுஜன் சமாஜ், அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ்மாநில குழு, தென்னாட்டு மக்கள் கட்சி, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சி, மூக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சமுதாய அமைப்பினரும், பொதுமக்களும் மரியாதை செலுத்தினர்.

    தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குரு பூஜை விழாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அரசியல் கட்சியினர் குறிப்பிட்ட நேரத்தில் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.


    Next Story
    ×