search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரை வையாபுரி
    X
    துரை வையாபுரி

    வைகோ மகன் துரை வையாபுரி ம.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படுத்துவாரா?

    ம.தி.மு.க.வை பொறுத்தவரை அரசியல் களத்தில் தனித்து நின்று எதிர்பார்த்த அளவு அக்கட்சி சாதிக்கவில்லை. வைகோவின் ஆவேசமான பேச்சு மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே அந்த கட்சிக்கான அடித்தளம்.
    சென்னை:

    ம.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பதவியான தலைமை கழக செயலாளர் பதவி வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    துரை வையாபுரி சமீப காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபட தொடங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வைகோவின் தயக்கம் காரணமாக அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்காமல் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    கட்சியின் இளைஞர் அணி செயலாளர் போன்ற ஏதாவது ஒரு பதவி வழங்கலாம் என்று நிர்வாகிகளில் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் தலைமை கழக நிர்வாக பொறுப்பு வழங்குவதை வைகோ விரும்பியதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தியதில் 104 வாக்குகள் துரை வையாபுரிக்கு ஆதரவாக கிடைத்தது. 2 வாக்குகள் மட்டுமே எதிர்த்து விழுந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் துரை வையாபுரிக்கு தலைமை கழக செயலாளர் பதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    தலைமை கழக செயலாளர் பதவி என்பது அதிகாரம் மிக்கது. கிட்டத்தட்ட கட்சியின் முழு கட்டுப்பாடும் துரை வையாபுரியின் கீழ்தான் இருக்கும்.

    கட்சி அலுவலகம், நிர்வாகம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமனம், அனைத்தும் தலைமை கழக செயலாளரின் ஒப்புதல் பெற்றே நடைபெறும்.

    பொதுச்செயலாளருக்கு அடுத்த பதவி இதுதான். துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளிடமும் கேள்வி கேட்க முடியும்.

    பொதுச்செயலாளர் பெயரில் அறிக்கைகள் வெளியிடுவது, வரவு-செலவு கணக்குகளை மேற்பார்வையிடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்.

    வைகோ

    ம.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் துரை வையாபுரியின் செயல்பாடுகள் அமைய வேண்டும். ம.தி.மு.க.வை பொறுத்தவரை அரசியல் களத்தில் தனித்து நின்று எதிர்பார்த்த அளவு அக்கட்சி சாதிக்கவில்லை. வைகோவின் ஆவேசமான பேச்சு மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே அந்த கட்சிக்கான அடித்தளம்.

    இப்போது புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ள தனது மகனுக்குதான் எதிர்பார்த்ததை விட அதிகமான திறமை, ஆளுமை, ஆட்களை வசீகரிக்க கூடிய கவர்ச்சி, மனிதாபிமானம் என பொது வாழ்வுக்கு தேவையான அனைத்துமே இருக்கிறது. எனவே தான் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அவரது நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் துரை வையாபுரி கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவாரா? என்பது போகப்போக தெரியும்.


    Next Story
    ×