search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.என்.ரவி
    X
    ஆர்.என்.ரவி

    புதிய கவர்னர் பதவி ஏற்பு விழாவை திறந்தவெளி புல்வெளி அரங்கில் நடத்த ஏற்பாடு

    கொரோனா காலகட்டம் என்பதால் அதிகபட்சமாக 500 பேர் பங்கேற்கும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி (வயது69) நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் மத்திய உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றியவர். 2019-ம் ஆண்டு முதல் நாகலாந்து கவர்னராக இருந்து வந்தார். தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு வந்த அவரை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு ஆர்.என்.ரவி வந்தார்.

    கவர்னர் மாளிகையின் மெயின் வாசல் பகுதியில் இருந்து தமிழக காவல் துறையின் குதிரைப்படை சார்பில் 12 குதிரைகள் அணிவகுப்புடன் மாளிகைக்கு கவர்னர் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் மாளிகை அதிகாரிகளும் அவரை வரவேற்று அழைத்துச்சென்றனர். கவர்னருடன் அவரது உறவினர்கள் 15 பேரும் வந்துள்ளனர்.

    கவர்னர் மாளிகையில் நாளை காலை 10.35 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அங்குள்ள தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் பந்தல் அமைத்து விழா நடத்தப்படுகிறது.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கவும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    கொரோனா காலகட்டம் என்பதால் அதிகபட்சமாக 500 பேர் பங்கேற்கும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும் மேடை அருகிலேயே தேநீர் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×