search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய காரை காணலாம்
    X
    விபத்தில் சிக்கிய காரை காணலாம்

    குற்றாலத்திற்கு குளிக்க வந்த 3 பேர் கார் விபத்தில் பலி

    சிவகிரி அருகே குற்றாலத்திற்கு குளிக்க வந்த 3 பேர் கார் விபத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகிரி:

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலிகான் (வயது28). இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு இவரும் நண்பர்களான மதுரை செல்லூரை சேர்ந்த பிரபு (24), கப்பலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (31) மற்றும் பேச்சிமுத்து (25), ஜான்சன் (29), அருண்குமார் (29), ரமேஷ்குமார் (28), மற்றொரு அருண்குமார், வாசகமணி ஆகிய 8 பேரும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்காக காரில் வந்தனர்.

    அவர்கள் வந்த கார் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தென்காசி மாவட்டம் சிவகிரி மொட்டை மலை அருகே வந்தது.

    அப்போது ஒரு திருப்பத்தில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதன் அருகே செக்போஸ்டும் உள்ளது.

    இதனால் சத்தம் கேட்டு போலீசாரும் அந்த பகுதியில் வாகனத்தில் வந்தவர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் காருக்குள் அடியில் சிக்கிய செல்லூரை சேர்ந்த பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு சிவகிரி மற்றும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உயிருக்கு போராடிய டிரைவர் மன்சூர் அலிகானை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மன்சூர் அலிகானும் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த பேச்சி முத்து, ஜான்சன் அருண்குமார், ரமேஷ்குமார் ஆகிய 4 பேருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் காயம் அடைந்த அருண்குமார், வாசகமணி ஆகியோருக்கு சிவகிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. கணேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை நடந்த இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை உள்ளது.
    Next Story
    ×