search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கே.என்.நேரு
    X
    அமைச்சர் கே.என்.நேரு

    மாநகராட்சி, நகராட்சிக்கு எப்போது தேர்தல்?- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம்கோர்ட்டில் கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது.

    இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கையையும் தொடங்கி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வருகிற 13-ந்தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் திடீரென ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் நகர்புற
    உள்ளாட்சி தேர்தல்
    மற்றும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வந்தாலும் இவற்றை சுப்ரீம் கோர்ட்டு விதித்த கால கெடுவுக்குள் நடத்தி முடிக்க சாத்தியமில்லாத சூழல் உருவாகி உள்ளது. எனவே தேர்தல் நடத்த மேலும் காலஅவகாசம் தேவை” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், தி.மு.க. அரசு தரம் உயர்த்தி உள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது. அந்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம்கோர்ட்டில் கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்-அமைச்சர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தி உள்ளார்.

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது சம்பந்தமாக தெளிவான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, “மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்களை எடுக்கும்போதே ஒப்பந்த அடிப்படையில் தான் எடுக்கிறோம். எனினும் அரசின் நிதி நிலைமையைக் கணக்கில் கொண்டு அவர்களுக்குத் தேவையானதை செய்ய தமிழக முதல்வரிடம் ஆலோசிக்கப்படும்” என்றார்.

    24 மணி நேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்து பார்வையிட்டார்.


    முன்னதாக சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை நகர்ப்புற சமுதாய நலக்கூடத்தில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துக்கான பொருட்களை வழங்கினார்.

    இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மாநகராட்சி சுகாதாரத்துறை ஆணையர் மனீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×