search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அரவிந்த், மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடியபோது எடுத்த படம்.
    X
    கலெக்டர் அரவிந்த், மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடியபோது எடுத்த படம்.

    கொரோனா குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

    தமிழக அரசு அறிவுறுத்தலின்படி குமரி மாவட்டத்தில் 9 முதல் பிளஸ்-2 வரை உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 483 பள்ளிகள் செயல்பட தொடங்கி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இந்தநிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டார் கவிமணி அரசு பள்ளி ஆகியவற்றை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாணவ-மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பார்வையிட்டார். மேலும் மாணவ-மாணவிகளிடம் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அரவிந்த் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, பள்ளி தலைமை ஆசிரியைகள் தயாபதி நளதா (எஸ்.எல்.பி), நல்லபாக்கியலெட் (கவிமணி) உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ஆய்விற்கு பிறகு கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு அறிவுறுத்தலின்படி குமரி மாவட்டத்தில் 9 முதல் பிளஸ்-2 வரை உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 483 பள்ளிகள் செயல்பட தொடங்கி உள்ளது.

    இந்த பள்ளிகளில் 99 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெறுகிறது. தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி பள்ளிகள் செயல்படுகிறது.

    மாணவ-மாணவிகளுக்கோ அல்லது தங்களது வீட்டிலுள்ள யாருக்கேனும் ஒருவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டாம். ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளித்திட வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 21 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தடுப்பூசிகள் 70 ஆயிரம் எண்ணிக்கையில் இருப்பில் உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×