search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் முதல் இடத்தில் இருப்பது தமிழத்துக்கு பெருமை - உதயநிதி

    தமிழகத்தில் 2-வது கொரோனா தொற்று அலை சாதுர்யமாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தப்பட்டது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரின் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா ஆவடியில் நேற்று மாலை நடந்தது.

    இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    முன்னதாக பால்வளத் துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் வரவேற்றார்.

    தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று ஒரே மாதத்தில் இந்தியாவில் தலைசிறந்த முதல் அமைச்சர்களில் 2-வது இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

    அதன் பிறகு 2 மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதால் இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சராக முதல் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஒர்மாக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

    கடந்த மே மாதம் 62 சதவீத மக்களின் நன்மதிப்பை நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றிருந்ததாகவும், ஜூன் மாதம் அது 6 சதவீதம் உயர்ந்து 68 சதவீதமாகி உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    முக ஸ்டாலின்

    இதற்கெல்லாம் நமது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் சிறப்பான பணிகளும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் தான் காரணம். இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.

    தமிழகத்தில் 2-வது கொரோனா தொற்று அலை சாதுர்யமாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்து 3-வது அலை வரக்கூடாது. வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆவடி பகுதியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் 120 மாணவ- மாணவிகளுக்கு இணைய வழி கல்வி கற்க ‘டேப் லெட்’ கணினியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    முன்னதாக சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரும் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான பிரபாகர ராஜாவின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் 2598 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, 10 கிலோ காய்கறிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    விருகம்பாக்கம் தொகுதி மக்கள் தங்கள் கோரிக்கை புகார்களை எளிய முறையில் தெரிவிக்க உதவும் ‘நம்ம விருகம்பாக்கம் செயலி’ கட்டளை அறை, கட்டணமில்லா எண் ஆகியவற்றையும் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, காசிமுத்து மாணிக்கம், பகுதி செயலாளர்கள் மு.ராசா, கே.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.தங்கராஜன், ஜெகதீஸ்வரன், ச.ரா.சீனிவாசன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×