search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா இரண்டாம் அலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 19,200 நபர்கள் பாதிக்கப்பட்டடுள்ளனர். காய்ச்சல் முகாம்கள், கிருமி நாசினி தெளித்தல், கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தி சிகிச்சை அளித்தல் மூலமாக கொரோனா நோயானது மாவட்டத்தில் கட்டுக்குள் வந்துள்ளது. முககவசம் அணிதல், சமுக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவை முன்னெச்சரிக்கை தடுப்பு முறைகளாக அறிவுத்தப்பட்டு வருகின்றன.

    இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கக் கூடிய பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    21,000 மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்பசுகாதாரநிலையங்கள், ஆர்.சி.எஸ் மெயின் ரோடு- பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தினந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் வசிக்கக்கூடிய கிராமங்களிலும் பிரத்யேக தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் நடைபெறும் நாட்கள் முன்னதாகவே அந்தந்த கிராமங்களில் தண்டோரா, ஆட்டோக்கள் மூலம் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. மேற்கண்ட சிறப்பு முகாம்களை பயன்படுத்தி 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், கொரோனாவில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×