search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதம்பாக்கத்தை சேர்ந்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியபோது எடுத்த படம்.
    X
    ஆதம்பாக்கத்தை சேர்ந்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியபோது எடுத்த படம்.

    சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் பெறப்பட்ட 549 மனுக்கள் மீது துரித நடவடிக்கை

    ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ துறை மூலம் சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் பெறப்பட்ட 549 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டார்.

    அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பொதுமக்கள் குறைகேட்கும் பிரசார பயணம் ஆகும்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    அப்போது அவர், ‘இந்த பிரசார பயணம் மூலம் தமிழகம் முழுவதும் சென்று மக்களின் கோரிக்கை மனுக்களை நேரில் பெற்று, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாளில் தீர்த்து வைப்பேன்’ என்று உறுதிமொழியை அறிவித்து சபதம் ஏற்றார்.

    பின்னர் அவர், இந்த பயணத்தை திருவண்ணாமலையில் ஜனவரி 29-ந் தேதி தொடங்கி சென்னையில் பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு செய்தார். மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு திட்டம் வகுத்தார். ஆனால் அவரால் 187 தொகுதிகளுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் போன்ற கட்சி பணிகள் காரணமாக அவரால் 47 தொகுதிகளுக்கு நேரில் செல்ல முடியவில்லை. எனினும் அந்த தொகுதி மக்களின் குறைகளையும் நிர்வாகிகள் மூலம் மு.க.ஸ்டாலின் பெற்றார்.

    ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்கள் 72 பெட்டிகள் மூலம் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கொண்டு வரப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மனுக்கள் இணையதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் பெறப்பட்டுள்ளது.

    தமிழக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் 100 நாட்களில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை, வாக்குறுதியை தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறேன். இப்போது மீண்டும் அந்த உறுதிமொழியை அளிக்கிறேன்’ என்றார்.

    தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன் முதல் உத்தரவாக, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற தனித்துறையை உருவாக்கி, அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தார்.

    பொதுமக்கள் மனுக்கள் அளித்த பெட்டியின் சாவிகளை அந்த அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.

    தற்போது அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவரிடம் 9-ந் தேதி அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

    அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 72 மரப்பெட்டிகளிலும் மற்றும் 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன.

    பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இதுவரை சுமார் 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

    மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.

    இதுவரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் செயல்பட தொடங்கி 10 நாட்கள் ஆனதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.

    சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராணிக்கு முதியோர் உதவித்தொகையும், பரங்கிமலை நித்யாவிற்கு விதவை உதவித்தொகையும், தியாகராயநகர் சத்தியநாராயணனுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையும்,

    சூளைமேடு தாயாரம்மாவிற்கு முதிர்கன்னி உதவித்தொகையும், தண்டையார்பேட்டை சுமதிக்கு தையல் எந்திரமும், வில்லிவாக்கம் உதயகுமாருக்கு வாரிசு சான்றிதழும், ஆயிரம் விளக்கு நந்தினிக்கு காதுகேட்கும் கருவியும்,

    ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டபாளையம் ஜெயந்திக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், வெங்குபட்டு ஊராட்சி முத்துராமனுக்கு வீடு கட்ட உதவியும், சிறுவாளை சுபாஷ்-க்கு சொட்டுநீர் பாசன உதவியும் ஆகிய நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முதற்கட்டமாக பொது கோரிக்கைகள் தொடர்பாக வரப்பெற்ற 4 மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் ஆணை, முதல்-அமைச்சரால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டன.

    அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமியின் கோரிக்கையின் அடிப்படையில், அழிஞ்சிவாக்கம் கிராம ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை ரூ.10.1 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதி ஆணையும்,

    திருவள்ளூர் மாவட்டம் முருகனின் கோரிக்கையை ஏற்று, ஆமூர் ஊராட்சி, சித்தேரி கால்வாயில் தடுப்பணை கட்டுவதற்கு ரூ.4.6 லட்சத்தில் அனுமதி ஆணையும்,

    ராணிப்பேட்டை மாவட்டம் குணசேகரனின் கோரிக்கை அடிப்படையில், அசநெல்லிகுப்பம் கிராமம், சிமெண்டு சாலை அமைப்பதற்கு ரூ.1.89 லட்சத்தில் அனுமதி ஆணையும், கல்மேல்குப்பம் ஊராட்சி புவனேஸ்குமாரின் கோரிக்கை அடிப்படையில், எருக்கம்தொட்டி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாய் அமைக்க ரூ.1.1 லட்சம் அனுமதி ஆணை ஆகிய நலத்திட்டங்களுக்கான ஆணைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இத்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்” துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×