search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சோழவந்தானில் தன்னை கொல்ல முயன்ற கணவனை கொன்ற இளம்பெண்

    சோழவந்தானில் தன்னை கொல்ல முயன்ற கணவனை கொன்ற இளம்பெண் கைதானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான்:

    திண்டுக்கல் முத்தழகு பட்டி தெற்கு வீதியை சேர்ந்தவர் டைசன் ராஜா (வயது 33). இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மன் பட்டியைச் சேர்ந்த எஸ்ரா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக டைசன் ராஜா சரியாக வேலைக்கு செல்லாமல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இவர் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் உள்ளன.

    மேலும் 2018 ஆம் ஆண்டு சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் நடந்த லட்சுமணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் டைசன் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    டைசன் ராஜாவுக்கு மது பழக்கம் இருந்தது. இதன் காரணமாக தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் டைசன் ராஜா மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் விரக்தி அடைந்த எஸ்ரா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் உறவினர்கள் இருவரையும் அழைத்து சமரசம் பேசியதை தொடர்ந்து டைசன் ராஜாவுடன் எஸ்ரா வாழ சம்மதித்தார்.

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு எஸ்ரா கணவர் வீட்டுக்கு குழந்தைகளுடன் திரும்பினார். இதற்கிடையில் டைசன் ராஜா மீண்டும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த டைசன் ராஜா, எஸ்ராவிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரமடைந்த டைசன் ராஜா கொலை செய்யும் நோக்கத்தில் வீட்டில் இருந்த கல்லை எடுத்து எஸ்ரா மீது போட முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்டு எஸ்ரா விலகியதால் கல் அவர்மீது படவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத டைசன் ராஜா மனைவியை கொல்ல முயன்றார்.

    அப்போது கீழே கிடந்த கல்லால் எஸ்ரா, கணவனின் தலையை பிடித்து கல்லில் இடிக்கச் செய்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டைசன் ராஜா மயங்கி விழுந்தார்.

    ரத்த காயங்களுடன் மீட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டைசன் ராஜா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுலோசனா, சப்- இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து எஸ்ராவை கைது செய்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், கணவர் டைசன் ராஜா சரியாக வேலைக்கு செல்லாமல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருந்தது. மேலும் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி கொடுமைப்படுத்தினார். சம்பவத்தன்று இரவு எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட டைசன் ராஜா கல்லால் என்னை தாக்கி கொல்ல முயன்றார். ஆனால் அவரிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே கீழே கிடந்த கல்லால் அவரது தலையை இடிக்கச் செய்தேன். இதில் அவர் இறந்து விட்டார் என எஸ்ரா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×