search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ்
    X
    மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ்

    சென்னை மக்களுக்கு உதவ கொரோனா கட்டுப்பாட்டு மையம்- மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தகவல்

    சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கட்டுப்பாட்டு மையம் மூலம் அளிக்கப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள் குறித்த விவரங்களையும் பெறலாம். தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள், உளவியல் ஆலோசனை போன்றவையும் வழங்கப்படும். எந்த மாதிரியான உணவு முறையை எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக எந்த மாதிரியான கேள்விகளையும் கேட்கலாம்.

    எங்கு பரிசோதனை கொடுக்கலாம்? எந்த ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்? என்பன போன்ற கேள்விகளையும் கேட்டு கட்டுப்பாட்டு மையத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    மக்கள் தங்கள் சந்தேகங்களை அறிந்து கொள்ள 044- 4612 2300, 044- 25384520 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    கொரோனா சந்தேகம் குறித்த பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.

    சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளை கொண்ட கட்டுப்பாட்டு மையம் மீண்டும் செயல்படுகிறது.

    கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு மையத்துக்கு 2 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் கட்டுப்பாட்டு மையம் மூலம் அளிக்கப்படுகிறது.

    தேவையில்லாத கொரோனா கழிவுகளை எடுப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பது முக்கியமானதாகும். 60 முதல் 70 சதவீதம் பேர் வீட்டில் தனிமையில் இருப்பார்கள்.

    கட்டுப்பாட்டு அறை மூலம் அவர்களை கண்காணிப்பார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி அளிக்கப்படும்.

    உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கும் போது கூடுதலான கவனத்துடன் கண்காணிக்கப்படுவார்கள்.

    சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள நோயாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவிகள் செய்யப்படும்.

    இந்த கட்டுப்பாட்டு மையம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு மட்டுமே ஆனதாகும். மாநில கட்டுப்பாட்டு மையம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் செயல்படுகிறது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

    திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வெகு சிலரே கலந்து கொள்ள வேண்டும் என்று விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளோம்.

    சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இவர்களில் 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    முதல் டோஸ் போட்டவர்கள் இரண்டாவது முறை அவர்களாக வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள். நமது தேவைக்கு ஏற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×