search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்தவர்களை செவிலியர்கள் திருப்பி அனுப்பிய காட்சி.
    X
    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்தவர்களை செவிலியர்கள் திருப்பி அனுப்பிய காட்சி.

    ஊட்டியில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு

    ஊட்டியில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து தடுப்பூசி போட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பின்னர் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அவர்களிடம் செவிலியர்கள் கொரோனா தடுப்பு மருந்து இருப்பு இல்லாததால் நாளை (அதாவது இன்று) வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதனால் வெகுநேரம் வரிசையில் நின்ற பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

    அதேபோல் ஊட்டி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு மருந்து இல்லாததால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தடுப்பூசி திருவிழா தொடங்கி சில நாட்களிலேயே தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. இங்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    வெளியிடங்களுக்கு சென்று வந்ததால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பரிசோதனை செய்ய வந்தவர்கள் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மாத்திரைகள் மட்டும் வழங்கப்பட்டது. பலர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப் பட்டனர். இதற்கு பரிசோதனைக்கான போதுமான கருவிகள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, நீலகிரியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வந்தது. போதுமான அளவு இருப்பு இல்லாததால் சென்னையில் இருந்து தடுப்பு மருந்து வரவழைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கருவிகள் கூடுதலாக கேட்கப்பட்டு உள்ளது என்றனர்.
    Next Story
    ×