search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டெல்டா மாவட்டங்களில் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

    24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு வெறும் ஏமாற்று வார்த்தைகளாக மாறி விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என மனிதநேய மக்கள் கட்சி கூறியுள்ளது.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த ஆண்டு 7.71 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் சம்பா அறுவடை நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு மீண்டும் விவசாயிகள் துயரத்திற்கு உள்ளாகினர்.

    இந்த இழப்புகளை சரி கட்டும் நோக்கில் டெல்டா விவசாயிகள் கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். கோடை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.

    கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 35 ஆயிரம் ஏக்கர் என 1 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

    இச்சூழலில் சட்டப்பேரவைத்தேர்தல் பரப்புரையின் போது ஏப்ரல் 1-ந் தேதி முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    இதனை தொடர்ந்து ஏப்ரல்1 முதல் 24 மணி நேரமும் சீராக மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிந்த ஏப்ரல் 6-க்கு பிறகு மும்முனை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு வெறும் ஏமாற்று வார்த்தைகளாக மாறி விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.

    உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×